வங்கதேச அணிக்கு எதிராக நடந்துகொண்ட விதம்: இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சஸ்பெண்ட்

By செய்திப்பிரிவு

துபாய்: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் நடத்தை விதிகளை மீறியதற்காக இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஐசிசியால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) நடத்தை விதிகளை மீறியதாக கூறி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையால், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இரண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாது. மேலும் அவரது போட்டி கட்டணத்தில் 75% அபராதம் விதிக்கப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இந்த தண்டனையால் ஹர்மன்பிரீத் கவுரால் ஆசிய விளையாட்டு போட்டிகளில் சில போட்டிகளை விளையாட முடியாமல் போகும்.

சஸ்பெண்ட் பின்னணி: கடந்த வாரம் டாக்காவில் வங்கதேச அணிக்கு எதிரான மகளிர் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி பங்கேற்றது. வங்கதேச அணியுடனான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியை இந்திய அணி ‘டை’யில் முடித்தது. இதனால் ஒருநாள் போட்டி தொடருக்கான கோப்பையை இரு அணிகளும் பகிர்ந்து கொண்டன. பொதுவாக, ஆட்டம் ‘டை’யில் முடிவடைந்தால் சூப்பர் ஓவர் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவது வழக்கம்.

ஆனால், போட்டியை நடத்துவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரம் முடிவடைந்ததால் சூப்பர் ஓவர் அமல்படுத்தப்படாமல் போட்டி ‘டை’யில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்ததால், கோப்பையை இரு அணிகளும் பகிர்ந்து கொண்டன.

இதே போட்டியில், தனக்கு வழங்கப்பட்ட எல்பிடபிள்யூ-க்கு எதிராக ஹர்மன்பிரீத் அதிருப்தியை வெளிப்படுத்தினார். களத்தில் பேட்டை கொண்டு ஸ்டெம்புகளை தாக்கினார். தொடர்ந்து, ஆட்டத்துக்குப் பிறகு கோப்பையை பகிர்தளிக்கும் நிகழ்வின்போது, இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத், “ஏன் இங்கே தனியாக இருக்கிறீர்கள்? நடுவர்களை அழைத்து வாருங்கள். நீங்கள் போட்டியை ‘டை’ செய்யவில்லை. நடுவர்கள் உங்களுக்காக அதைச் செய்தார்கள். அவர்களை அழைக்கவும். அவர்களுடன் புகைப்படம் எடுத்தால்தான் சிறப்பாக இருக்கும்” என்று வங்கதேச கேப்டன் நிகர் சுல்தானிடம் கூறினார்.

இதனால் கோபமடைந்த சுல்தானா, இந்திய அணியுடன் புகைப்படம் எடுக்காமல் தனது அணியுனருடன் வெளியேறினார். இதனால் சர்ச்சை ஏற்பட்டது. இதன் பிறகு பேசிய ஹர்மன்பிரீத், ”இந்த ஆட்டத்தில் இருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம். கிரிக்கெட்டுக்கு அப்பாற்பட்டு இங்கு நடுவர்கள் நடந்து கொண்டது எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அடுத்த முறை நாங்கள் வங்கதேசத்துக்கு வரும்போது இந்த வகையான நடுவரை சமாளித்து, அதற்கேற்ப எங்களை தயார்படுத்திக் கொள்வோம். நடுவர்கள் அளித்த சில முடிவுகளால் மிகவும் ஏமாற்றமடைந்து உள்ளோம்” என்றார்.

இது நிகழ்வு சர்ச்சையான நிலையில் தற்போது அவரை ஐசிசி சஸ்பெண்ட் செய்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE