2022-ல் தோனிக்கும் ஜடேஜாவுக்கும் உரசல் ஏற்பட்டதா? - அம்பத்தி ராயுடு பதில்

By செய்திப்பிரிவு

2022-ஆம் ஆண்டு தோனிக்கும், ஜடேஜாவுக்கும் இடையே எந்த உரசலும் ஏற்படவில்லை என்று சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக ஜடேஜாவுக்கும், தோனி மற்றும் சிஎஸ்கே நிர்வாகத்துக்கும் இடையே மோதல்கள் இருந்து வருவதாக அவ்வப்போது சலசலக்கப்படுகிறது. இந்த வருடம் ஐபிஎல் போட்டியின் இறுதிக் கட்டத்தில்கூட ஜடேஜா - தோனி இடையே பிரிவு ஏற்பட்டதாக உறுதிப்படுத்தாக தகவல்கள் வெளிவந்தன. எனினும், இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்காக ஜடேஜாவின் ஆட்டம் சிறப்பாக அமைந்ததுடன், கோப்பையை வென்று தரக்கூடிய கடைசி பந்தில் பவுண்ட்ரி அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார். அப்போது அவரை தூக்கிக் கொண்டாடினார் தோனி.

இந்த நிலையில், பிரிவு தொடர்பான செய்திகளில் உண்மையில்லை என்று அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் அவர் பேசும்போது, ”2022-ல் ஜடேஜாவுக்கு தோனியின் மீது அதிருப்தி எல்லாம் இல்லை. ஜடேஜா 2022-ம் ஆண்டு தன் தலைமையில் சிஎஸ்கே அணி சிறப்பாக விளையாடவில்லை என்றுதான் கவலையாக இருந்தார். அந்த சீசனில் சிஎஸ்கேவில் யாரும் எதிர்பார்த்தபடி விளையாடவில்லை.

சிஎஸ்கே அணியில் ஜடேஜாவின் வளர்ச்சிக்கு தோனியே காரணமாக இருந்தார். சுமார் 10 - 12 வருடங்கள் ஜடேஜாவை தோனி அருகிலிருந்து ஆளாக்கினார். 2023 ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஜடேஜாவின் ஆட்டத்தைக் கண்டு தோனி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்” என்றார் ராயுடு. முன்னதாக. 2023-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுடன் தனது ஓய்வை அம்பத்தி ராயுடு அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE