அவர்கள் விளையாடும் ஆடுகளங்களை பார்க்க வேண்டும்: பாஸ்பால் குறித்து இஷான் கிஷன்

By செய்திப்பிரிவு

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: பாஸ்பால் பாணி ஆட்ட அணுகுமுறை சுவாரசியமானதுதான். ஆனால், அதை செயல்படுத்த அதற்கு ஏற்ற ஆடுகளம் மற்றும் களச் சூழல் வேண்டும் என இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி ‘பாஸ்பால்’ முறையில் கிரிக்கெட்டை அணுகி வருகிறது. அது உலக அளவில் பேசப்பட்டு வருகிறது. பாஸ்பால் ஆட்ட முறையை விமர்சித்தோ அல்லது வரவேற்றோ அது இருக்கிறது. இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய 17 டெஸ்ட் போட்டிகளில் அண்மையில் முடிந்த ஆஷஸ் 4-வது டெஸ்ட் போட்டி மட்டும்தான் டிரா ஆகியுள்ளது. அது கூட மழை காரணமாக நடந்தது.

“எல்லா நாளும் அவ்வளவு வேகமாக விளையாட முடியாது. சமயங்களில் அது சூழலை பொருத்தும் அமையும். இங்கிலாந்து அணி விரைந்து ரன் குவிக்கிறது. ஆனால், அவர்கள் எந்த மாதிரியான ஆடுகளத்தில் அதை செய்கிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். நாங்கள் ஆடும் ஆடுகளங்களில் எளிதில் ரன் குவிக்க முடியாது. ஏனெனில், ஆடுகளத்தில் பந்து திரும்பும் வகையிலும், எழும்பியும் வரும்.

அதுவே ஃப்ளாட்டாக உள்ள பிட்ச்சில் விரைந்து ரன் சேர்க்கலாம். அட்டாக் செய்து ஆட வேண்டிய தேவை ஒவ்வொரு போட்டியிலும் எங்களுக்கு இல்லை என கருதுகிறேன். ஆட்டத்துக்கு தேவை என்றால் மட்டும் அதைச் செய்வோம். டெஸ்ட் கிரிக்கெட்டில் எல்லா நேரமும் அட்டாக்கிங் ஷாட் ஆட முடியாது என நினைக்கிறேன்” என கிஷன் தெரிவித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் 33 பந்துகளில் அரை சதம் பதிவு செய்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE