12.2 ஓவர்களில் 100 ரன்களை கடந்து அசத்தல்: 22 வருட சாதனையை முறியடித்தது இந்திய அணி

By செய்திப்பிரிவு

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 12.2 ஓவர்களில் 100 ரன்களை கடந்து 22 வருட சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது.

இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில்முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 438 ரன்கள் குவித்தது. விராட் கோலி 121, ரோஹித்சர்மா 80, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57, ரவிச்சந்திரன் அஸ்வின் 56 ரன்கள் சேர்த்தனர்.

தொடர்ந்து விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி நேற்று முன்தினம் 4-வது நாள் ஆட்டத்தில் 115.4 ஓவர்களில் 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் கிரெய்க் பிராத்வெயிட் 75, அலிக் அத்தனாஸ் 37 ரன்கள் சேர்த்தனர். அந்த அணி தனது கடைசி 6 விக்கெட்களை 47 ரன்களுக்கு தாரைவார்த்தது. இந்திய அணி சார்பில் மொகமது சிராஜ் 5 விக்கெட்களையும்ரவீந்திர ஜடேஜா, முகேஷ் குமார் ஆகியோர்தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

183 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி விரைவாக ரன்கள் சேர்க்கும் முனைப்பில் அதிரடியாக விளையாடியது. ரோஹித் சர்மா 35 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் அரை சதம் விளாசினார். மறுபுறம் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் மட்டையை சுழற்றஇந்திய அணி 12.2 ஓவர்களில் (74 பந்துகளில்) 100 ரன்களை எட்டியது.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் 100 ரன்களை எட்டிய அணி என்ற சாதனையை படைத்தது இந்திய அணி. இதற்கு முன்னர் 2001-ல்நடைபெற்ற ஆசிய டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 13.2 ஓவர்களில் (80 பந்துகள்) 100 ரன்களை எட்டியதே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை தற்போது 22 வருடங்களுக்குப் பிறகு முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது இந்தியஅணி.

அரை சதம் விளாசிய ரோஹித் சர்மா 44 பந்துகளில் 57 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 30 பந்துகளில் 38 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி 24 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. தனது முதல் அரை சதத்தை கடந்த இஷான் கிஷன் 34 பந்துகளில் 52 ரன்களும், ஷுப்மன் கில் 29 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர்.

365 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 32 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்தது. கிரெய்க் பிராத்வெயிட் 28 ரன்னிலும், கிர்க் மெக்கென்சி ரன் ஏதும் எடுக்காமலும் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தனர். டேக்நரைன் சந்தர்பால் 24, ஜெர்மைன் பிளாக்வுட் 20 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

கைவசம் 8 விக்கெட்கள் இருக்க வெற்றிக்கு மேற்கொண்டு 289 ரன்கள் தேவை என்ற நிலையில் நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தை சந்திக்க மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஆயத்தமாக இருந்தது. ஆனால் மழை காரணமாக கடைசி நாள் ஆட்டம் கைவிடபட்டது. அதனால் இந்தப் போட்டி டிரா ஆனது. தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.

இஷானின் விரைவு அரை சதம்: விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இந்திய அணியின் இஷான் கிஷன் 33 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதன் மூலம் இந்திய விக்கெட் கீப்பர்களில் விரைவாக அரை சதம் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த வகையில் ரிஷப் பந்த் 28 பந்துகளில் அரை சதம் விளாசி முதலிடத்தில் உள்ளார்.

ஸ்டிரைக் ரேட்டில் 4-வது இடம்: இஷான் கிஷன் 34 பந்துகளில், 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் விளாசினார். அவரது ஸ்டிரைக் ரேட் 152.94 ஆகும். டெஸ்ட் போட்டிகளில் இந்திய வீரர்களில் இது 4-வது அதிகபட்ச ஸ்டிரைக் ரேட் ஆகும். இந்த வகை சாதனையில் 50 ரன்களுக்கு மேல் எடுத்த இந்திய வீரர்களில் கபில் தேவ் முதலிடத்தில் உள்ளார். அவர், 1982-ம் ஆண்டு லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 55 பந்துகளில் 89 ரன்கள் விளாசியிருந்தார். அப்போது அவரது ஸ்டிரைக் ரேட் 161.81 ஆக இருந்தது.

ஆஸி. சாதனையும் முறியடிப்பு: போர்ட் ஆஃப் ஸ்பெயின் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 24 ஓவர்களில் 181 ரன்கள் குவித்தது. 7.54 என்ற ரன் ரேட்டில் இந்திய அணி இந்த ஸ்கோரை எடுத்திருந்தது. இது ஓர் இன்னிங்ஸில் 20 ஓவர்களில் ஓர் அணி எடுத்த அதிகபட்ச ரன்களாகும். இதற்கு முன்னர் 2017-ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 32 ஓவர்களில் 7.53 ரன் ரேட்டில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 241 ரன்கள் குவித்திருந்ததே சாதனையாக இருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE