‘ரிஷப் பந்துக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்’ - அதிரடி அரைசதம் விளாசிய இஷான் கிஷன்

By செய்திப்பிரிவு

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 33 பந்துகளில் அரைசதம் பதிவு செய்தார் இந்திய வீரர் இஷான் கிஷன். இந்நிலையில், சக அணி வீரர் ரிஷப் பந்துக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற கடைசி நாள் ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது.

இந்தச் சூழலில் இரண்டாவது இன்னிங்ஸில் வேகமாக விளையாடி ரன் குவித்த இஷான் கிஷன் தெரிவித்தது: “இங்கு வருவதற்கு முன்பு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றிருந்தேன். அங்கு ரிஷப் பந்த் இருந்தார். அவர் எனக்கு பேட்டிங் சார்ந்து டிப்ஸ் கொடுத்திருந்தார். நாங்கள் இருவரும் இளையோர் கிரிக்கெட்டில் இருந்து ஒன்றாக விளையாடி வருகிறோம். நான் எப்படி செய்வேன், எனது மைண்ட் செட் என அனைத்தும் அவர் அறிவார்.

அதே நேரத்தில் எனது பேட்டிங் குறித்து யாரேனும் சொன்னால் நன்றாக இருக்கும் என எண்ணினேன். அதற்கு பந்த் உதவினார். அவருடன் உரையாடல் அதற்கு உதவியது. அதனால் அவருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். அதேபோல நான்காவது பேட்ஸ்மேனாக நான் பேட் செய்ய எனக்கு ஊக்கம் கொடுத்த கோலி பாய்க்கு (அண்ணன்) நன்றி” என கிஷன் தெரிவித்தார்.

இந்த இன்னிங்ஸில் அவர் பயன்படுத்திய பேட்டில் 'RP17' என குறிப்பிடப்பட்டிருந்தது. பந்த் போலவே ஒற்றைக் கையில் சிக்ஸரும் விளாசி இருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE