சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு: இலங்கை வீரர் திரிமன்னே அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமன்னே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

33 வயதாகும் லஹிரு திரிமன்னே இதுவரை 44 டெஸ்ட் போட்டிகள், 127 சர்வதேச ஒரு நாள் போட்டிகள், 26 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2010-ல்கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார் திரிமன்னே. மேலும், 5 சர்வதேச ஒரு தினப் போட்டிகளில் இலங்கை அணிக்கு கேப்டன் பதவியையும் அவர் வகித்துள்ளார்.

2014-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின்போது இலங்கை அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார் திரிமன்னே. சுமார் 14 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் அவர் திடீரென ஓய்வு முடிவை நேற்று அறிவித்துள்ளார்.

ஓய்வு முடிவு குறித்து திரிமன்னே கூறியதாவது: ஒரு கிரிக்கெட் வீரராக என்னால் செய்ய முடிந்ததை சிறப்பாகச் செய்தேன். கிரிக்கெட் விளையாட்டு மீது எனக்கு அதிக மரியாதை உள்ளது. தாய்நாட்டுக்காக என்னுடைய கடமையை நான் நேர்மையாகவும், ஒழுக்க நெறிகளுடனும் செய்து முடித்துள்ளேன் என்ற திருப்தி எனக்கு உள்ளது. எனக்கு ஆதரவுதந்த சக அணி வீரர்கள், பயிற்சியாளர், உடலியக்க நிபுணர்கள் அனைவருக்கும் எனது நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

2022-ம் ஆண்டில் பெங்களூருவில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கடைசியாக திரிமன்னே விளையாடினார். 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2088 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 3 சதங்கள் அடங்கும்.

அதைப் போல் 127 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3,194 ரன்களும், 26 டி20 போட்டிகளில் விளையாடி 291 ரன்களும் எடுத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE