ஆசிய சுற்றுப் பயணத்துக்கான பிஎஸ்ஜி அணியில் இடம்பெறாத எம்பாப்பே: அணி மாறுகிறாரா?

By செய்திப்பிரிவு

பாரிஸ்: ஆசிய சுற்றுப் பயணத்துக்கான பிஎஸ்ஜி கால்பந்தாட்ட கிளப் அணியில் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே இடம்பெறவில்லை. இந்நிலையில், அவர் வேறு அணிக்கு செல்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அது குறித்து பார்ப்போம்.

24 வயதான எம்பாப்பே, சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் பிரான்ஸ் நாட்டுக்காக விளையாடி வருகிறார். அந்த அணியின் பிரதான ஸ்ட்ரைக்கராக அவர் உள்ளார். ரொனால்டோ, மெஸ்ஸி போன்ற வீரர்களை தொடர்ந்து அடுத்த தலைமுறையை சேர்ந்த நட்சத்திர ஆட்டக்காரராகவும் அறியப்படுகிறார்.

கிளப் அளவிலான போட்டிகளில் பிரான்ஸ் நாட்டின் பிஎஸ்ஜி அணிக்காக கடந்த 2017 முதல் விளையாடி வருகிறார். இதுவரை பிஎஸ்ஜி அணிக்காக 260 போட்டிகளில் 212 கோல்கள் பதிவு செய்துள்ளார். இந்த நிலையில்தான் அந்த அணியின் ஆசிய நாட்டு சுற்றுப்பயணத்தில் எம்பாப்பே இடம்பெறவில்லை. இந்த பயணத்தில் ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் பிஎஸ்ஜி அணி விளையாடுகிறது. இதில் ரொனால்டோ விளையாடி வரும் கிளப் அணியான அல்-நசர் அணிக்கு எதிராகவும் பிஎஸ்ஜி விளையாடுகிறது.

வெள்ளிக்கிழமை வரை பிஎஸ்ஜி அணியில் எம்பாப்பே பயிற்சி செய்து வந்துள்ளார். ஆனால், சனிக்கிழமை ஆசியா புறப்பட்ட 29 வீரர்கள் அடங்கிய அணியில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தில் அவரது சகோதரர் எத்தன் எம்பாப்பே இடம்பெற்றுள்ளார்.

காரணம் என்ன? - அடுத்த சீசனில் ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் கிளப் அணியில் எம்பாப்பே இணைய உள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது. இது ஃப்ரீ-ட்ரான்ஸ்பர் அடிப்படையில் இருக்கும் எனத் தெரிகிறது. மறுபக்கம் அவரை தக்கவைக்க சுமார் 10 ஆண்டு காலம் ஒப்பந்தம் மேற்கொள்ள பிஎஸ்ஜி முனைப்பு காட்டியுள்ளது. அதற்கு எம்பாப்பே தரப்பில் முறையான பதில் ஏதும் இல்லை எனத் தெரிகிறது. இந்த நிலையில்தான் அவரை ஆசிய பயணததுக்கான அணியில் வாய்ப்பு கொடுக்க மறுத்துள்ளது பிஎஸ்ஜி அணி நிர்வாகம். அவரை உடனடியாக அணியில் இருந்து விடுவிக்க பிஎஸ்ஜி திட்டமிட்டு வருவதாகவும் பிரான்ஸ் நாட்டில் இருந்து வரும் தகவல்கள் சொல்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE