இன்டர் மியாமி அணிக்காக மெஸ்ஸி அடித்த வின்னிங் கோல்!

By செய்திப்பிரிவு

புளோரிடா: கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர ஆட்டக்காரர்களில் ஒருவர் லயோனால் மெஸ்ஸி. அர்ஜென்டினாவைச் சேர்ந்த இவர் தற்போது இன்டர் மியாமி கால்பந்தாட்ட கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.

அண்மையில் தான் இந்த கிளப் அணியில் அவர் இணைந்தார். வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் முதல் முறையாக இன்டர் மியாமி அணிக்காக அவர் களம் இறங்கினார். தனது முதல் போட்டியில் அணியின் வெற்றிக்கு தேவைப்பட்ட கோலை பதிவு செய்து அசத்தினார். அதன் மூலம் லீக்ஸ் கோப்பை தொடரில் Cruz Azul அணியை 2-1 என்ற கோல் கணக்கில் இன்டர் மியாமி அணி வீழ்த்தியது.

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனான லயோனல் மெஸ்ஸி, கடந்த ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் சிறப்பாக விளையாடி அணிக்கு கோப்பையைப் பெற்றுத் தந்தார்.

கிளப் அளவிலான போட்டிகளில் பார்சிலோனா மற்றும் பிஎஸ்ஜி அணிக்காக கடந்த காலங்களில் விளையாடி உள்ளார். தற்போது அமெரிக்க நாட்டு கிளப் அணியான இன்டர் மியாமி அணிக்காக விளையாட இரண்டரை ஆண்டு காலம் ஒப்பந்தம் செய்துள்ளார். வரும் 2026 கால்பந்து உலகக் கோப்பை தொடர் அமெரிக்க, மெக்சிக்கோ மற்றும் கனடாவில் தான் நடைபெற உள்ளது. அந்த வகையில் மெஸ்ஸியின் வருகை அமெரிக்க அளவில் கால்பந்து விளையாட்டில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தும் என தெரிகிறது.

இன்டர் மியாமி மற்றும் Cruz Azul அணிக்கு இடையிலான போட்டியின் 93-வது நிமிடத்தில் கிடைத்த ஃப்ரி கிக் வாய்ப்பை கோலாக மெஸ்ஸி மாற்றினார். அவரது ஆட்டத்திறனை கண்டு சக அணி வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் ஆரவாரம் செய்தனர்.

“நான் கோல் அடிக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் அது ஆட்டத்தின் கடைசி கட்டம். நான் கோல் பதிவு செய்ய வேண்டியது அவசியம். அதனால் நாங்கள் பெனால்டிக்குச் செல்லவில்லை. இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியம். இது புதிய தொடர். இந்த வெற்றி மூலம் இதில் நாங்கள் முன்னோக்கி செல்ல முடியும்” என போட்டிக்கு பிறகு மெஸ்ஸி பேசி இருந்தார்.

ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் மெஸ்ஸி களம் கண்டார். ‘உலகின் நம்பர் 10’ என மெஸ்ஸி அறிமுகம் செய்யப்பட்டார். அவர் 7 முறை சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்பதற்கான Ballon d’Or விருதை வென்றுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE