பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் வழக்கில் இன்று தீர்ப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த போட்டிக்கான இந்திய மல்யுத்த அணி தேர்வு டெல்லியில் இன்று முதல் (ஜூலை 22) நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற வீரரான பஜ்ரங் பூனியா (65 கிலோ), காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் வினேஷ் போகத் (53 கிலோ) ஆகியோருக்கு தகுதி தேர்வு போட்டியில் இருந்து விலக்கு அளித்து ஆசிய விளையாட்டு போட்டியில் நேரடியாக பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இடைக்கால கமிட்டி அனுமதி அளித்தது.

பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் இருவரும் மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிரான போராட்டத்தை ஒரு மாதத்துக்கும் மேலாக நடத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர்களுக்கு ஆசிய விளையாட்டில் கலந்து கொள்ள சிறப்பு சலுகை வழங்கப்பட்டதற்கு சக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், இந்த சிறப்பு அனுமதியை எதிர்த்து 20 வயதுக்கு உட்பட்ட உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் வென்ற வீரரான அஜீத் கல்கால், ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் கைப்பற்றிய வீராங்கனையான அந்திம் பங்ஹால் சார்பில் கூட்டாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த மனு நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத், தீர்ப்பை சனிக்கிழமைக்கு (ஜூலை 22) தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE