“கோலியை பார்த்து கத்துக்கணும் இளம் வீரர்களே!” - இயன் பிஷப்

By செய்திப்பிரிவு

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்கள், விராட் கோலியின் ஆட்டத்தை பார்த்து நுணுக்கங்களை கற்க வேண்டும் என முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் இயன் பிஷப் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனது 500-வது போட்டியில் விளையாடி வருகிறார் கோலி. அதுவும் 500-வது போட்டியில் அரை சதம் பதிவு செய்த முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 161 பந்துகளில் 87 ரன்கள் எடுத்துள்ளார் கோலி. இதில் 8 பவுண்டரிகள் அடங்கும். அதோடு 30 சிங்கிள், 11 இரண்டு ரன் ஓட்டங்கள் மற்றும் 1 மூன்று ரன் ஓட்டத்தையும் கோலி எடுத்துள்ளார்.

“500-வது சர்வதேச போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு வீரர், களத்தில் கிடைக்கும் ஒவ்வொரு ரன்னுக்குமான மதிப்பை அறிந்தவராக செயல்படுகிறார். ரன் எடுக்க டைவ் அடித்து உடலை வருத்தும் அவரது அர்ப்பணிப்பு அதை உங்களுக்கு சொல்லும். கரீபியன் மண்ணில் உள்ள இளம் வீரர்கள் அனைவருக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்றுதான். பவுண்டரி கிடைக்கும் என காத்திருக்க வேண்டாம். அவரை போல ஓட்டம் எடுங்கள். அவரை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்” என பிஷப் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் 72-வது ஓவரில் மூன்று 2 ரன்கள் ஓடி இருந்தார் கோலி. அதில் அந்த ஓவரின் கடைசி பந்தில் எதிரணி வீரர்களுக்கு எந்தவித ரன் அவுட் வாய்ப்பும் தரக் கூடாது என டைவ் அடித்து கிரீஸ் லைனை கடந்திருந்தார். சச்சின், திராவிட் மற்றும் தோனியை தொடர்ந்து 500 சர்வதேச போட்டிகளில் விளையாடும் நான்காவது இந்தியராகி உள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE