“அவரது நிலையை எட்ட கடின உழைப்பு தேவை” - சூர்யகுமார் உடனான ஒப்பீடு குறித்து இளம் பாகிஸ்தான் வீரர்

By செய்திப்பிரிவு

கொழும்பு: இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் மற்றும் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் உடன் ரசிகர்கள் தன்னை ஒப்பிடுவது குறித்து இளம் பாகிஸ்தான் வீரர் முகமது ஹாரிஸ் கருத்து தெரிவித்துள்ளார். தற்போது அவர் பாகிஸ்தான்-ஏ அணிக்காக ஏசிசி எமர்ஜிங் அணிகளுக்கான ஆசிய கோப்பை தொடரில் விளையாடி வருகிறார்.

கடந்த திங்கள்கிழமை அன்று ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக 46 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்திருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 119.56. அவர் பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

“எங்கள் இருவரையும் இப்போது ஒப்பிடுவது சரியானதாக இருக்காது. ஏனெனில், இந்த நிலையை எட்ட சூர்யகுமார் யாதவ் கடினமாக உழைத்துள்ளார். அவருக்கு 32 வயதாகிறது. எனக்கு 22 வயது தான் ஆகிறது. எங்களுக்கு எங்களது எல்லை என்பது என தெரியும். ஒவ்வொருவருக்கும் அது மாறுபடும். நான் 360 டிகிரி பேட்ஸ்மேனாக உருவெடுக்க விரும்புகிறேன். ஆனால், அவர்கள் பெயரை பயன்படுத்தி அல்ல” என ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெற்ற பிஎஸ்எல் 2023 சீசனில் 11 இன்னிங்ஸில் 350 ரன்கள் எடுத்திருந்தார் ஹாரிஸ். அன்-ஆர்தடாக்ஸ் முறையில் களத்தில் ஷாட் ஆடுவது இவரது வழக்கம். இதே பாணியில் தான் சூர்யகுமார் யாதவ் மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோர் ஆடுவர். ஐசிசி டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருப்பவர் சூர்யகுமார் யாதவ் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE