உலகக் கோப்பை தொடருக்கான திட்டங்கள்: ராகுல் திராவிட், ரோஹித் சர்மாவுடன் ஆலோசனை நடத்துகிறார் அகர்கர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் 5-ம் தேதி தொடங்குகிறது. போட்டியை நடத்தும் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 8-ம் தேதி ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 15-ம் தேதி பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதுகிறது.

தற்போது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதனால் புதிய தேர்வுக்குழு தலைவரான அஜித் அகர்கர், பயிற்சியார் ராகுல் திராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட அணி நிர்வாகத்தினரை சந்திப்பதற்கான. வாய்ப்பு கிடைக்கவில்லை. மேற்கு இந்தியத் தீவுகளில் இந்திய அணியின் திறன்களை தேர்வுக்குழு உறுப்பினர் சலில் அங்கோலா பார்வையிட்டு வருகிறார்.

அவர், 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முடிவடைந்தவுடன் தாயகம் திரும்புகிறார். இதன் பின்னர் குறுகிய வடிவிலான நிர்வாகத்தினரை சந்திக்க அகர்கர் முடிவு செய்துள்ளார். இதற்காக விரைவில் அவர், மேற்கு இந்தியத் தீவுகளுக்கு பயணமாக உள்ளார். அங்கு செல்லும் அவர், ராகுல் திராவிட், ரோஹித் சர்மா ஆகியோரை சந்தித்து உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்பான திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கோப்பை தொடருக்கு தயார் செய்யப்பட்டுள்ள 20 வீரர்களின் உடற்தகுதி, பணிச்சுமை ஆகியவை குறித்து தேர்வுக்குழுவினரும், அணி நிர்வாகமும் கலந்தாலோசிக்கக்கூடும். இந்த சந்திப்பின் போது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அணியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் அதுதொடர்பான திட்டங்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்படக்கூடும்.
ஜஸ்பிரீத் பும்ராவின் உடற்தகுதி நிலை குறித்தும், 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடருக்காக அயர்லாந்து செல்ல முடியுமா? இல்லையா? என்பது குறித்தும் விரிவான விவாதங்கள் நடைபெறும் என்று தெரிகிறது. இது ஒருபுறம் இருக்க தேசிய கிரிக்கெட் அகாடமி விளையாட்டு அறிவியல் மற்றும் மருத்துவப் பிரிவு ஜஸ்பிரித் பும்ராவுக்கு உடற்தகுதி சான்றிதழை இன்னும் வழங்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE