விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று டென்னிஸ் உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளார் முதல் நிலை வீரரான 20 வயதே ஆன ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ். நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை 1-6, 7-6(6), 6-1, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் அல்கராஸ். இந்த ஆட்டம் 4 மணி நேரம் 43 நிமிடங்கள் நடைபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் புல் தரை கிராண்ட் ஸ்லாம் போட்டியில் தொடர்ச்சியாக 34 வெற்றிகளை குவித்த ஜோகோவிச்சின் வெற்றி வேட்டைக்கு தடை போட்டுள்ளார் அல்கராஸ். ஸ்பெயினின் ஜாம்பவான் ரபேல் நடால் போன்றே அல்கராஸும் களிமண் தரை ஆடுகளம் மற்றும் கடின தரை ஆடுகளங்களிலேயே தனது முத்திரையை பதித்து வந்தார். இதனால் அல்கராஸை, ஜோகோவிச் எளிதாக வீழ்த்தி 8-வது முறையாக கோப்பையை கைளில் ஏந்திவிடலாம் என்ற நினைப்புடன் களமிறங்கினார்.
அதற்கு தகுந்தவாறே முதல் செட்டை ஆதிக்கப் போக்குடன் 6-1 என கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை டைபிரேக்கர் வரை கொண்டு சென்று தன்வசப்படுத்தினார் அல்கராஸ். அவரது ஆட்டத்திறன் அவர்,ஏன் டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறார் என்பதை நிரூபிக்கும் வகையில் இருந்தது. அங்கேயே ஜோகோவிச் தனது நிதானத்தையும், ஆட்டத்தின் போக்கையும் நழுவவிடத் தொடங்கினார். மறுபுறம் உற்சாகமாக செயல்பட்ட அல்கராஸ், 3-வது செட்டில் ஜோகோவிச்சை எழவிடாமல் 6-1 என கைப்பற்றி அதிர்ச்சி கொடுத்தார். 4-வது செட்டில் ஜோகோவிச் மீண்டு வந்து 6-3 என கைப்பற்றினார். வெற்றியை தீர்மானித்த கடைசி செட்டில் ஜோகோவிச் 2-0 என முன்னிலையில் இருந்தார். ஆனால் அல்கராஸ், ஜோகோவிச் செய்த தவறுகளை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு புள்ளிகளை குவித்து முன்னேற்றம் கண்டார். முடிவில் 6-4 என கடைசி செட்டை கைப்பற்றி முதன்முறையாக விம்பிள்டனில் வாகை சூடினார்.
டென்னிஸ் அரங்கில் ஜோகோவிச் 50 முறை ரோஜர் பெடரருக்கு எதிராக விளையாடி உள்ளார். இதில் 17 ஆட்டங்கள் கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் மோதியவை. அதேவேளையில் ரபேல் நடாலுக்கு எதிராக 59 முறை மோதி உள்ளார் ஜோகோவிச். இதில் 18 ஆட்டங்கள் கிராண்ட் ஸ்லாம் தொடரில் மோதியவை. இவர்களுக்கு ஊடாக இங்கிலாந்தின் ஆன்டி முர்ரேவுடனும் போராட தவறவில்லை ஜோகோவிச். அவருக்கு எதிராக 10 கிராண்ட் ஸ்லாம் ஆட்டங்கள் உட்பட 36 முறை மோதினார்.
இதில் பெடரர் ஓய்வு பெற்றுவிட்டார். ரபேல் நடால் காயம் காரணமாக நீண்டகாலம் விளையாடாமல் உள்ளார். 20 வருடங்களில் டென்னிஸ் உலகை ஆண்ட இரு ஜாம்பவான்களுடன் மல்லுக்கட்டிய ஜோகோவிச், தற்போது 20 வயதான ஸ்பெயின் புயலான அல்கராஸுடன் போராட வேண்டிய நிலையில் உள்ளார். விம்பிள்டன் போட்டி முடிவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் அடுத்த மாத இறுதியில் நடைபெற உள்ளது. இதிலும் ஜோகோவிச்சுக்கும் அல்கராஸ் கடும் சவால் அளிக்கக்கூடும். ஏனெனில் அல்கராஸ் நடப்பு சாம்பியனாக உள்ளார்.
விம்பிள்டன் இறுதிப் போட்டி முடிவடைந்ததும் நோவக் ஜோகோவிச் கூறும்போது, “அல்கராஸ் எல்லாவிதமான ஆடுகளங்களிலும் சிறப்பாக விளையாடும் தன்மையை விரைவாக மேம்படுத்திக் கொண்டது ஆச்சர்யம் அளிக்கிறது. அவர், புல் தரையில் இந்த ஆண்டு சிறப்பாக விளையாடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை, ஆனால் அவர், உலகின் சிறந்த வீரர் என்பதை நிரூபித்துவிட்டார்.
உண்மையைச் சொல்வதானால், அவரைப் போன்ற ஒரு வீரருக்கு எதிராக நான் இதுவரை விளையாடியதில்லை. ரோஜர் பெடரர், ரபேல் நடால் மற்றும் என்னிடம் உள்ள ஆட்ட திறன்களின் சில கூறுகள் அல்கராஸிடம் இருப்பதாக கடந்த 12 மாதங்களுக்கும் மேலாக ரசிகர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நான் அதை ஒப்புக்கொள்கிறேன்.
அல்கராஸ் அடிப்படையில் சிறந்தவர். ரபேல் நடாலுடன் நாம், பார்த்த மனநிலை, போராட்ட குணம், நம்பமுடியாத டிபன்ஸ் ஆகியவற்றை அல்கராஸும் பெற்றுள்ளார். அவருக்கு நல்ல பேக்ஹேண்ட்ஸ் திறன்கள் உள்ளன. இவற்றில் சில எனது பேக்ஹேண்ட்ஸுடன் ஒத்துப்போகிறது என்று நினைக்கிறேன். அல்கராஸ் ஒரு முழுமையான வீரர்” என்றார்.
விம்பிள்டன் இறுதி ஆட்டத்தைப் பார்க்கும்போது நீங்களும், அல்கராஸ் மோதும் ஆட்டங்கள் மிகப்பெரிய பகையாளி ஆட்டங்களின் தொடக்கமாக இருக்குமா என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு ஜோகோவிச் பதிலளிக்கும்போது, “என்னைப் பொருத்தவரை, நானும் அப்படித்தான் நினைக்கிறேன். அடுத்த சில காலங்களுக்கு அவரும் பல வெற்றிகளைக் குவிப்பார் என்று எண்ணுகிறேன். நான் இன்னும் எத்தனை காலம் விளையாடுவேன் என்பது எனக்குத் தெரியவில்லை” என்றார்.
"வெற்றி பெறுவது மிகவும் நன்றாக இருந்தது, ஆனால் நான் தோற்றிருந்தால் கூட என்னைப் பற்றி நான் பெருமைப்பட்டிருப்பேன். இந்த அழகான போட்டியில் வரலாற்றை உருவாக்கிய, விளையாட்டின் ஜாம்பவானுக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடியது சிறப்பானது. என்னைப் பொறுத்தவரை இது நம்பமுடியாதது. இந்த நிலைகளில் விளையாடுவது நம்பமுடியாததாக இருந்தது. 20 வயதான எனக்கு இது ஆச்சரியமாக இருக்கிறது, இந்த நிலையை மிக வேகமாக அடைவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை" என கார்லாஸ் அல்கராஸ் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago