3-வது பவுண்டரியை அடிக்க 160 பந்துகள் - முடிவுக்கு வருகிறதா கோலியின் டெஸ்ட் கிரிக்கெட்?

By ஆர்.முத்துக்குமார்

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை என்ற பழமொழியை நாம் கேட்டிருப்போம். அதே போல்தான் இருக்கிறது கோலியின் கதை. இன்றைய தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட், இந்திய அணியின் சுவர் என்று அழைக்கப்பட்டவர் கூட தன் ஆரம்ப கால கறார் தடுப்பாட்ட உத்திகளை கொஞ்சம் கொஞ்சம் தளர்த்திக் கொண்டு அணிக்கான ரன் தேவைகளுக்காக ஆடினார். ஆனால், கோலியின் கதை தலைகீழ். ஓரளவுக்கு பாசிட்டிவ் ஆக ஆடிய கோலி, இப்போது கட்டெறும்பாகத் தேய்ந்து கொண்டிருப்பதைத்தான் பார்க்கிறோம்.

மே.இ.தீவுகளுக்கு எதிரான டொமினிகா டெஸ்ட் போட்டியில் விராட் கோலி ஆடிய இன்னிங்ஸ் அணையும் ஜோதி போல் இல்லை; மாறாக சூட்டைத் தொலைத்த தணல் போல் இருந்தது. முதல் பவுண்டரியை அடிக்க 81 பந்துகள். 2-வது பவுண்டரியை அடிக்க மேலும் 43 பந்துகள் எடுத்துக் கொண்டு மொத்தம் 124 பந்துகள். மூன்றாவது பவுண்டரி அடிக்க மேலும் 36 பந்துகள். அதாவது 3 பவுண்டரிகளை அடிக்க மொத்தம் 160 பந்துகளை சந்தித்தார் விராட் கோலி.

இத்தகைய பேட்டிங்கை அதுவும் மே.இ.தீவுகளின் பரிதாப பவுலிங்கிற்கு எதிராக, 9 பவுலர்கள் வீசிய பரிதாப பவுலிங்கிற்கு எதிராக என்றால், இதனை நம் கோலி ஜால்ராக்காள் போல், ‘ஆகா! என்னே பெரிய தடுப்பாட்டம்!!’, ‘சுனில் கவாஸ்கரையும் விஞ்சி விட்டார்’, தன் “தவறுகளைத் திருத்திக் கொண்டு அணிக்காக ஆடுகிறார்” என இன்ன பிற அசட்டுப் புகழாரங்கள் சூட்டப்படுவது விரக்திச் சிரிப்பையே நம்மில் வரவழைக்கிறது. இதில் கூச்சமில்லாமல் முதல் பவுண்டரியை 81-வது பந்தில் அடித்ததை மட்டையை உயர்த்திக் கொண்டாட வேறு செய்கிறார்.

சரி, அப்படியாவது சந்தேகமற, நீக்கமற முழு முற்றான பேட்டிங் உத்தியுடன் ஆடினார். இப்படி இவர் ஆட ஆரம்பித்தால் அசைக்க முடியாது என்ற நம்பிக்கையையாவது கொடுக்கிறதா என்றால், அதுவும் இல்லை. ஏனெனில், அவருக்கு 40 மற்றும் 72-வது ரன்களில் இரண்டு கேட்ச்கள் விடப்பட்டன. 45 ரன்களில் இருந்தபோது ரன் அவுட் வாய்ப்பும் கோட்டை விடப்பட்டது. இது என்ன இன்னிங்சா அல்லது கிரிக்கெட்டா, அதுவும் உலகின் நம்பர் 1 வீரர் ஆடும் முறையா இது?

ரூ.1,050 கோடி நெட்வொர்த் சொத்துக்கு அதிபதியான இந்த விராட் கோலி ஸ்பான்சர்களுக்காகவும், தான் விளம்பரம் செய்யும் பொருட்களுக்குமாவது இன்னும் 4-5 ஆண்டுகள் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் ஆடித்தான் ஆகவேண்டும். அந்த சுய-பாதுகாப்புணர்வு (self-presevative instinct) தான் அவரது தடுப்பாட்டத்தில் தெரிகிறதே தவிர, தடுப்பாட்டத்தின் சிறந்த காட்சிப்படுத்தல் என்றும் கூறுவதற்கில்லை. ஏனெனில் 2 லைஃப்களையும் அவர் பெற்றார்.

விவரம் புரியாத சிலர், ஆஸ்திரேலியா தொடரில் சச்சின் டெண்டுல்கர் சிட்னியில் எடுத்த 241 ரன் இன்னிங்ஸைக் கொண்டு போய் விராட் கோலியின் ஆக சொத்தையான இந்த இன்னிங்ஸுடன் ஒப்பீடு செய்கின்றனர். அங்கு அது ஒரு சவாலாக பார்க்கப்பட்டது. சச்சின் டெண்டுல்கருக்கு ஆஸ்திரேலியா என்பது இன்னொரு இந்தியா போல்தான். அங்குள்ள ரசிகர்கள் இவரது இன்னிங்ஸைப் பார்ப்பதற்கென்றே வருபவர்கள். அப்படியிருக்கையில் அந்தத் தொடரில் தொடர்ந்து சொதப்பியதையும் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்தில் ஆட்டமிழந்ததையும் ரிவர்ஸ் செய்யுமாறு கவர் ட்ரைவ் என்ற ஒன்றைத் துறந்து ஆடிக்காட்டினார். இது உண்மையான பவுலிங்கிற்கு எதிராக உண்மையான பிட்சில் சச்சின் கண்ட மீட்டெழுச்சி.

ஆனால், விராட் கோலி, மே.இ.தீவுகளுடன் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆடியது இந்த வகை இன்னிங்ஸா? வேடிக்கைதான்! பவுலர் இல்லாமல் பகுதி நேர பவுலிங்கையெல்லாம் பயன்படுத்திய மே.இ.தீவுகளின் பந்து வீச்சை தனது ஆவரேஜையும் ஸ்போர்ட்ஸ் வர்த்தக - விளம்பரச் சந்தையில் தன் நெட்-ஒர்த்தை பராமரிக்கவும் ஆடிய இன்னிங்சும் சச்சின் டெண்டுல்கர் தனது பேட்டிங்கை மீட்டெடுக்கவும் சவாலான பவுலிங்கை ஆதிக்கம் செலுத்த வேண்டிய கட்டாயத்திலும் இந்தியா தொடரை வெல்வதற்கான முயற்சி கொண்ட கடும் இன்னிங்ஸும் ஒன்றாகிவிடுமா?

இந்த இன்னிங்ஸ் மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அகமதாபாத்தில் அடித்த 186 ரன்கள் டிராவுக்குத்தான் வித்திட்டது. அதிலும் 4-ம் நாள் ஒரு பவுண்டரி அடிக்க 122 பந்துகளை சாப்பிட்டர் விராட் கோலி. ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளப் புள்ளிவிவரங்களின்படி, 2019 வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 57.81, அதன் பிறகு 44.20 என்ற ஸ்ட்ரைக் ரேட்டாகக் குறைந்துள்ளது. எதற்காக இந்த ஆமை வேக மாற்றம்? கிரிக்கெட்டின்பால் உள்ள பற்றுதல், நேயம் என்று பாசிட்டிவ் ஆக பார்ப்பவர்கள் கூறுவார்கள். ஆனால் அதனடியில் வர்த்தக நோக்கங்களுக்காக தன் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் சுய பாதுகாப்புணர்வே மிதமிஞ்சி தெரிகிறது என்ற ஐயம் மிக்கவர்கள் கூறுவார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்