சென்னை லீக் கால்பந்து: கோலின்றி முடிந்தது ஆட்டம் இந்தியன் வங்கி ஏமாற்றம்

By ஏ.வி.பெருமாள்

சென்னை லீக் சீனியர் டிவிசன் கால்பந்து போட்டியில் இந்தியன் வங்கி-இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.

பலம் வாய்ந்த அணிகளுள் ஒன்றான இந்தியன் வங்கி இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போட்டி டிராவில் முடிந்தது அந்த அணிக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இதனால் இந்தியன் வங்கி விளையாட்டு அதிகாரி ஸ்டீபன், பயிற்சியாளர் சபீர் பாஷா ஆகியோர் கடும் அதிருப்தியடைந்தனர்.

செயின்ட் ஜோசப்-சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சென்னை லீக் கால்பந்து போட்டிகள் சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியன் வங்கியும், ஆர்பிஐயும் மோதின. இரு அணிகளுமே நன்றாக ஆடியபோதும் எந்த அணியும் கோல் வாய்ப்பை உருவாக்குவதற்கு முயற்சி எடுக்கவில்லை.

இந்தியன் வங்கி அணிக்கு ஒரேயொரு கார்னர் வாய்ப்பு கிடைக்க, அதில் ஜாஸ்கான் துல்லியமாக கோல் கம்பத்தை நோக்கி பந்தை அனுப்பினாலும், ஆர்பிஐ கோல் கீப்பர் முகமது ஜுனைஸ் ஒரு கையால் அற்புதமாக “சேவ்” செய்தார். இதனால் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்திலாவது கோல் விழும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் ஏமாற்றத்திலேயே முடிந்தது. இதில் இரு அணிகளுமே வீரர்களை மாற்றிப் பார்த்தும் பலன் கிடைக்கவில்லை. இந்தியன் வங்கிக்கு இரு கோல் வாய்ப்புகள் கிடைத்தபோதும், அதை அந்த அணி வீணடித்தது.

முதல் வாய்ப்பில் இடதுபுறத்தில் இருந்த “லெப்ட் விங்கர்” மெர்லின், தன்னிடம் வந்த பந்தை, கோல் கம்பத்துக்கு முன்னால் சுமார் 5 யார்ட் தூரத்தில் இருந்த ஸ்டிரைக்கர் ஜானுக்கு “பாஸ்” செய்தார். ஆனால் அதை ஜான் வெளியில் அடித்தார். பின்னர் கிடைத்த ப்ரீ ஹிக் வாய்ப்பில் சதீஷ்குமார் பந்தை வெளியில் உதைத்து வீணடித்தார். இதனால் எவ்வித கோலுமின்றி ஆட்டம் டிராவில் முடிந்தது. ஆட்டத்தைக் காண வந்த ரசிகர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. ஆர்பிஐ பின்கள வீரர் சிவபிரியன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆர்பிஐ அணியின் செயல் பாட்டில் ஆட்டத்துக்கு ஆட்டம் முன்னேற்றம் இருப்பதைக் காண முடிந்தது. இதற்கு முன்பு ரயில்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1-1 என்ற கணக்கில் டிரா செய்த ஆர்பிஐ அணி, இந்த ஆட்டத்தில் அதைவிட சிறப்பாக ஆடியது. அந்த அணியின் பின்கள வீரர்கள் மற்றும் மிட்பீல்டர்கள் சிறப்பாக ஆடினாலும், ஸ்டிரைக்கர்களின் ஆட்டம் மெச்சும்படியில்லை. கடந்த ஆட்டத்தைப் போலவே இந்த ஆட்டத்திலும் ஸ்டிரைக்கர்கள்தான் அந்த அணியின் மிகப்பெரிய பலவீனம்.

அதேநேரத்தில் முன்னணி அணியான இந்தியன் வங்கி அணியில் இரு நைஜீரியர்கள் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இருந்தபோதும், அந்த அணியால் கோலடிக்க முடியாமல் போனது மிகப்பெரிய பின்னடைவாகவே கருதப்படுகிறது. நல்ல வாய்ப்பை கோட்டைவிட்ட இந்தியன் வங்கி, இந்த ஆட்டத்தில் செய்த தவறை திருத்திக் கொள்ளாதபட்சத்தில் இனிவரும் ஆட்டங்களில் கடும் சவாலை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சென்னை எப்.சி. வெற்றி

முன்னதாக நடைபெற்ற முதல் டிவிசன் போட்டியில் சென்னை எப்.சி. அணி 2-0 என்ற கோல் கணக்கில் எஸ்.சி.ஸ்டெட்ஸ் அணியைத் தோற்கடித்தது. அந்த அணி தரப்பில் முரோன் மமா, ஜெயந்த்குமார் ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர்.

இன்று போட்டியில்லை

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுவதை முன்னிட்டு சென்னை லீக்கிற்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் இன்று எந்தப் போட்டியும் கிடையாது.

நாளைய ஆட்டங்கள்

முதல் டிவிசன்

நேதாஜி-சேலஞ்சர்ஸ் யூனியன்

நேரம்: பிற்பகல் 2.15

சீனியர் டிவிசன்

தெற்கு ரயில்வே-சுங்கத்துறை

நேரம்: மாலை 4.15

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்