விம்பிள்டன் | ஜோகோவிச்சை வீழ்த்தி பட்டம் வென்றார் அல்கராஸ்

By செய்திப்பிரிவு

லண்டன்: நடப்பு விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் அல்கராஸ். 1-6, 7-6(6), 6-1, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி பட்டம் வென்றார் அல்கராஸ்.

லண்டனில் நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரும், ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவருமான அல்கராஸ் மற்றும் இரண்டாம் நிலை வீரரான ஜோகோவிச்சும் விளையாடினார். இதில் முதல் செட்டை ஜோகோவிச் கைப்பற்றினார்.

அதன் பிறகான 2 செட்களை அல்கராஸ் வென்றார். தொடர்ந்து 4-வது செட்டை ஜோகோவிச் வென்றார். வெற்றியாளரை உறுதி செய்யும் 5-வது மற்றும் கடைசி செட்டில் இருவரும் அதிதீவிரமாக பலப்பரீட்சை செய்தனர். இருந்தும் இதில் அல்கராஸின் கை ஓங்கி இருந்தது. அதன் காரணமாக அந்த செட்டை அவர் வென்று விம்பிள்டன் சாம்பியன் ஆனார். முதல் முறையாக அவர் விம்பிள்டன் பட்டம் வென்றுள்ளார். சுமார் 4 மணி நேரம் 42 நிமிடங்கள் இந்தப் போட்டி நீடித்தது.

ஜோகோவிச்: “சில பெரிய சர்வீஸ்கள் மற்றும் அபார ஆட்டத்தை நீங்கள் (அல்கராஸ்) வெளிக்கொண்டு வந்தீர்கள். நீங்கள் இதற்கு தகுதியானவர். வாழ்த்துகள். விம்பிள்டனில் சவால் நிறைந்த இறுதிப் போட்டிகளில் இதற்கு முன்னர் நான் வெற்றி பெற்றுள்ளேன். அதில் இரண்டு போட்டிகள் நான் தோல்வியை தழுவி இருக்க வேண்டியது. அப்படியானதாக கூட இந்தப் போட்டி இருக்கலாம்” என உணர்ச்சிவசமாக ஆட்டத்திற்கு பிறகு ஜோகோவிச் பேசி இருந்தார்.

அல்கராஸ்: “கனவு நனவான தருணம் இது. 20 வயதான நான் இந்த நிலையை வேகமாக அடைவேன் என எதிர்பார்க்கவில்லை. நான் என்னை நினைத்து உண்மையிலேயே பெருமை கொள்கிறேன்” என வெற்றிக்கு பிறகு அல்கராஸ் தெரிவித்திருந்தார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE