டொமினிகாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பரிதாபத்துக்குரிய மே.இ.தீவுகள் அணியை இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது, ஆட்ட நாயகனாக அறிமுக டெஸ்ட்டிலேயே தேர்வு செய்யப்பட்டார் சத நாயகர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இந்தப் போட்டி இந்திய வெற்றியைக் கொண்டாடும் மனநிலையை ஏற்படுத்துவதை விட மே.இ.தீவுகளின் சரிவின் வேதனைகளை அதிகரிக்கச் செய்கிறது.
என்ன மாதிரியான அணி! காலப்போக்கில் பலதரப்பட்ட சக்திகளால் அழிக்கப்பட்டு இன்று உலகக் கோப்பைக்கும் தகுதி பெறாமல் மிகக்கேவலமாக ஒரு டெஸ்ட் போட்டியையும் இழந்துள்ளது. இதில் இந்திய வீரர்களின் மகாத்மியத்தைக் கொண்டாட எதுவுமில்லை. ஏனெனில் ஐசிசி வருவாய் சரிவரப் பகிரப்படுவதில்லை. இதனால் ஒவ்வொரு அணியாக அழிந்து வருகின்றது. ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அடுத்த இடத்தில் இப்போது தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அழிவின் விளிம்பில் உள்ளது.
வங்கதேசம் அதன் ரசிகர்களினாலும் பாகிஸ்தான் அதன் நீண்ட நெடிய கிரிக்கெட் மரபினாலும் உயிர்ப்புடன் இருந்து வருகிறது. ஆனால் இவையெல்லாமும் உடைந்து நொறுங்கும் தன்மைக்கு அருகில் உள்ளன என்பதையும் நாம் கவனமேற்கொள்ள வேண்டும். ஐபிஎல் உள்ளிட்ட தனியார் டி20 கிரிக்கெட் எனும் பணப்பேய் கிரிக்கெட்டை அழிப்பதோடு சிறந்த கிரிக்கெட் நாடுகளையும் காலி செய்து வருகின்றதன் ஒரு சோகமான நினைவூட்டலே இன்றைய மே.இ.தீவுகள் அணியின் நிலை.
இதில் நடுவர்கள் வேறு கையை வைத்துக் கொண்டு சும்மா இருப்பதில்லை. பரிதாப அணிக்கு 2வது இன்னிங்சில் 5 எல்.பி. தீர்ப்புகள். இதில் தேஜ்நரைன் சந்தர்பால், ரெய்ஃபர் ஆகியோருக்கு நடுவர் அவுட் கொடுத்திருக்க வேண்டியதில்லை. தேஜ்நரைன் அம்பயர்ஸ் காலில் அவுட். ரெய்ஃபருக்கு லெக் ஸ்டம்பில் மார்ஜினலாக அடிக்கிறது. சில விஷயங்களை நடுவர்கள் கவனமேற்கொண்டால் இத்தகைய கோளாறுகளையும் தவிர்த்திருக்கலாம்.
இதில் ஆட்டம் முடிந்தவுடன் ரோஹித் சர்மா சொன்னதுதான் வேதனையான நகைச்சுவை. “150 ரன்களில் மே.இ.தீவுகளை அவர்களின் சொந்த மண்ணில் சுருட்டியது ‘massive'” என்று ஏதோ பெரிய விஷயம் போல் சொல்லியிருப்பதே. நாம் வெற்றி பெற்று விட்டோம் என்பதற்காக ஒன்றுமில்லாமல் சக்கையும் சாறுமில்லாத ஒரு அணியை சுருட்டியதைப் பெரிய சாதனையாகச் சொல்லிக் கொள்ளலாமா என்ற கேள்வியை ரோஹித் சர்மா நோக்கி நாம் எழுப்ப வேண்டியது கட்டாயம்.
தோனி இது போன்ற வெற்றியையெல்லாம் பெரிதாகப் பேச மாட்டார். காரணம் உண்மை நிலை, யதார்த்த நிலை அவருக்குத் தெரியும். அதனால் நம் அணியின் குறைகளை களைய வேண்டும், பீல்டிங் இன்னும் முன்னேற வேண்டும் என்று நிறுத்திக் கொள்வார். விராட் கோலி கூட ஜெய்ஸ்வால், அஸ்வின் என்று பேசி முடித்துக் கொண்டிருப்பார். ஆனால் ரோஹித் சர்மா அவர்களது சொந்த மண்ணில் 150 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் அவர்களைச் சுருட்டியதை ‘மேசிவ்’ என்று கூறியது ஒரு வேதனையான நகைச்சுவைதான்.
இன்னொரு தமாஷ் கலந்த வேதனை, போட்டி முடிந்தவுடன் மே.இ.தீவுகளின் கேப்டன் பிராத்வெய்ட் கூறியதுதான்!! “பேசத்தொடங்கும் முன் ‘டொமினிகா’ போட்டியைக் காண வந்த ரசிகர்களுக்கு நன்றி” என்றாரே பார்க்கலாம். அங்கு எங்கே ரசிகர்கள் கூட்டம் இருந்தது, அங்கொன்றும் இங்கொன்றுமாக 2 பேர், 4 பேர் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அவர்களும் பல நேரங்களில் உறக்கத்திலும் செல்போனிலும் பிசியாக இருந்தனர்.
விவேக் காமெடியில் வருவது போல் ‘ஆளில்லாத கடைக்கு டீ ஆற்றியுள்ளனர் இரு அணியினரும்’, ஒருவேளை நடுவர் இருவரையும் ‘கிரவுட்’ என்றாரோ பிராத்வெய்ட், அல்லது தன் அணி இந்திய அணி வீரர்களையும் கிரவுட் கணக்கில் சேர்த்து விட்டாரோ என்னவோ? வேர்க்கடலை தின்றுகொண்டே மேட்ச் பார்த்த இருவர் கூட எதேச்சையாகப் பார்த்து விட்டு, ‘ஐயையோ! இந்தியாவும்-வெஸ்ட் இண்டீஸுமா?- கிளம்பிடுவோம் தாங்காது’ என்று போனதாகத்தான் தெரிகிறது. இதில் யாருக்கு நன்றி கூறினார் பிராத்வெய்ட். பரிதாபம்!! இது நகைச்சுவை அல்ல, வேதனையான விவகாரம். ஒரு புறம் ரோஹித் சர்மாவின் தமாஷ் என்றால் மறுபுறம் பிராத்வெய்ட்டின் தமாஷ்.
இதுபோன்ற தொடர்களை தவிர்க்க வேண்டும் அல்லது பலவீனமான அணிகளை உயர்த்துவதற்கு ஐசிசி முதலீடு செய்ய வேண்டும். இல்லையெனில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளின் செல்வாக்குதான் மேலோங்கும், ஏனெனில் நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை, தரமான கிரிக்கெட் ஆட்டத்தை அவர்கள் தான் ஆடுகிறார்கள்.
இந்திய அணி செல்வாக்கும் செல்வமும் இருந்தும் இப்படிப்பட்ட தொடர்களை ஆடியும் உள்நாட்டில் அணிகளைக் கூப்பிட்டு குழிப் பிட்ச்களைப் போட்டு 2-3 நாட்களில் டெஸ்ட் போட்டிகளை முடித்து போலி வெற்றிக் கெக்கலி கொட்டுவதும் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என்பதையே நாம் கூற வேண்டியுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago