MLC | கான்வே, மில்லர் அபார கூட்டணி: டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் வெற்றி

By செய்திப்பிரிவு

டெக்சாஸ்: அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் எனும் ஃப்ரான்சைஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியுள்ளன. முதல் சீசனின் முதல் போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி உள்ளது டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி.

மேஜர் லீக் கிரிக்கெட் 2023 சீசனில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் , எம்ஐ நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ யூனிக்கார்ன்ஸ், வாஷிங்டன் ஃப்ரீடம், சியாட்டில் ஓர்காஸ் என ஆறு அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. கிட்டத்தட்ட இந்தியாவின் ஐபிஎல் போல அமெரிக்க நாட்டில் நடத்தப்படும் கிரிக்கெட் தொடர் இது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் போன்ற நாடுகளை சேர்ந்தச் வீரர்கள் இதில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

நடப்பு சீசனுக்கான முதல் போட்டியில் சுனில் நரைன் தலைமையிலான லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மற்றும் டூப்ளசி தலைமையிலான டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாயடின. இதில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே, 37 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். டேவிட் மில்லர், 42 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். சான்ட்னர் 21 ரன்களும், பிராவோ 6 பந்துகளில் 16 ரன்களும் எடுத்தனர். மில்லர் மற்றும் கான்வே இணைந்து 77 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நைட் ரைடர்ஸ் விரட்டியது. கப்டில், ரைலி ரூசோவ், நித்திஷ் குமார், உன்முக் சந்த் என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நான்கு பேரும் விரைந்து ஆட்டமிழந்தனர். ஜஸ்கரன் மல்ஹோத்ரா, 11 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். ரஸ்ஸல், 34 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். கேப்டன் நரைன், 15 ரன்களில் வெளியேறினார். பின்னர் 14 ஓவர்களில் 112 எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது அந்த அணி. அதன் மூலம் சூப்பர் கிங்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலர் முகமது மோஸின், 3 ஓவர்கள் வீசி 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரஸ்டி மற்றும் ஜெரால்ட் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர். கல்வின் மற்றும் பிராவோ ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE