ஆசிய தடகள சாம்பியன்ஷிப் | ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கப் பதக்கம்

By செய்திப்பிரிவு

பாங்காக்: 25-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தாய்லாந்தின் தலைநகரான பாங்காக் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று மகளிருக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் ஜோதி யார்ராஜி தங்கப் பதக்கம் வென்றார். பந்தய தூரத்தை அவர், 13.09 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். ஜப்பானின் டெராடா அசுகா (13.13 விநாடிகள்), அயோகி மசுமி (13.26 விநாடிகள்) ஆகியோர் முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர்.

ஆடவருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் அஜய் குமார் சரோஜ் பந்தய தூரத்தை 3:41.51 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். ஆசிய தடகள போட்டியில் அஜய்குமார் சரோஜ் பதக்கம் வெல்வது இது 3-வது முறையாகும். 2017-ம் ஆண்டு தங்கப் பதக்கமும், 2019-ல் வெள்ளிப் பதக்கமும் அவர், வென்றிருந்தார்.

ஆடவருக்கான டிரிப்பிள் ஜம்ப்பில் இந்தியாவின் அப்துல்லா அபுபக்கர் 16.93 மீட்டர் நீளம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். ஜப்பானின் ஹிகாரு இகேஹடா (16.73) வெள்ளிப் பதக்கமும், தென் கொரியாவின் கிம் ஜாங்வூ (16.59) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் ஐஸ்வர்யா கைலாஷ் மிஸ்ரா பந்தய தூரத்தை 53.07 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் பெற்றார். இலங்கையின் ராமநாயகே நதீஷா (52.61) தங்கப் பதக்கமும், உஸ்பெகிஸ்தானின் ஃபரிதா சோலீவா (52.95) வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE