WI vs IND முதல் டெஸ்ட் | இந்திய அணி 162 ரன்கள் முன்னிலை: ஜெய்ஸ்வால் அபார ஆட்டம்

By செய்திப்பிரிவு

டொமினிகா: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்துள்ளது இந்தியா. அறிமுக வீரர் ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தினர்.

இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. டொமினிகாவில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணியானது 64.3 ஓவர்களில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையடுத்து பேட் செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 23 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்திருந்தது.

இரண்டாம் நாள் ஆட்டத்தை 70 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடங்கியது இந்திய அணி. முதல் விக்கெட்டிற்கு விக்கெட் இழப்பின்றி 229 ரன்கள் சேர்த்தனர் ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோகித். 215 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார் அறிமுக வீரர் ஜெய்ஸ்வால். தொடர்ந்து 220 பந்துகளில் சதம் பதிவு செய்தார் ரோகித். இருந்தும் அடுத்த பந்தே அவர் ஆட்டமிழந்தார். இந்திய அணிக்காக ஒரே இன்னிங்ஸில் வெளிநாட்டில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு சதம் பதிவு செய்துள்ளனர். கடைசியாக கடந்த 2015-ல் தவான் மற்றும் முரளி விஜய் இதை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பேட் செய்ய வந்த சுப்மன் கில், 6 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த கோலி நிதானமாக ஆடி வருகிறார். 96 பந்துகளில் 36 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரே ஒரு பவுண்டரி அடங்கும். ஜெய்ஸ்வால், 350 பந்துகளில் 143 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். 14 பவுண்டரிகள் அவரது இன்னிங்ஸில் அடங்கும்.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் 162 ரன்கள் முன்னிலை பெற்று இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE