மறக்குமா நெஞ்சம் | யுவராஜ், கைஃப் கூட்டணி: இதே நாளில் லார்ட்ஸில் இங்கிலாந்தை வென்ற இந்தியா

By செய்திப்பிரிவு

சென்னை: கடந்த 2002-ல் இதே நாளில் இங்கிலாந்தில் நடைபெற்ற நாட்வெஸ்ட் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா. இந்த வெற்றிக்கு யுவராஜ் சிங் மற்றும் முகமது கைஃப் ஆகியோரின் அபார கூட்டணி முக்கிய காரணமாகும்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத வெற்றிகளில் ஒன்று நாட்வெஸ்ட் தொடரின் (2002) இறுதிப் போட்டி. இந்த தொடரில் இந்தியா, இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின. குரூப் பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின.

கடந்த 2002-ல் இதே நாளில் (ஜூலை 13) லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 325 ரன்கள் எடுத்தது. மார்கஸ் டிரெஸ்கோத்திக் மற்றும் நாசர் ஹுசைன் சதம் பதிவு செய்தனர். ஃபிளின்டாப் 32 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார்.

326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. அன்றைய தினம் அது மிகப்பெரிய இலக்காக கருதப்பட்டது. முதல் விக்கெட்டிற்கு சேவாக் மற்றும் கேப்டன் கங்குலி 106 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கங்குலி, 43 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து வெளியேறினார். சேவாக், 45 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து தினேஷ் மோங்கியா, ராகுல் திராவிட், சச்சின் ஆகியோர் விரைந்து வெளியேறினர்.

இந்த அணி 24 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்து தடுமாறியது. 6-வது விக்கெட்டிற்கு யுவராஜ் சிங் மற்றும் கைஃப் இணைந்து 120 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். யுவராஜ், 69 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 267 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது இந்திய அணியின் வெற்றிக்கு 59 ரன்கள் தேவைப்பட்டது. முகமது கைஃப் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார். 3 பந்துகள் எஞ்சியிருக்க 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது.

சட்டையை கழற்றி சுழற்றிய கங்குலி: இந்தியா வெற்றி பெற்ற தருணத்தை கொண்டாடும் விதமாக அப்போதைய கேப்டன் கங்குலி, லார்ட்ஸ் பால்கனியில் நின்றபடி தனது மேல் சட்டையை (டி-ஷர்ட்) கழற்றி சுழற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ லிங்க்..

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE