ஜெய்ஸ்வால் ஓப்பனிங், ஷுப்மன் கில் 3-ம் நிலை: பேட்டிங் வரிசை இதுதான்!

By ஆர்.முத்துக்குமார்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இன்று தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இடது கை அறிமுக வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களம் காண்கிறார்.

ரோஹித் சர்மா, யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாகக் களமிறங்க, முன்பு 3ம் நிலையில் இறங்கிய புஜாராவுக்குப் பதிலாக இந்த டெஸ்ட் முதல் ஷுப்மன் கில் 3-ம் நிலையில் இறங்குவார் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்குப் பிறகு வெளிநாட்டில் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சியில் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும்.

தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டிடம் பேசிய ஷுப்மன் கில், தான் 3-ம் நிலையில் இறங்குவதாகக் கேட்டிருக்கிறார், திராவிடும் சரி என்றதாக ரோஹித் சர்மா தெரிவித்தார். 2023-ல் சிறப்பான ஃபார்மில் இருக்கும் ஷுப்மன் கில், சேட்டேஷ்வர் புஜாராவின் இடத்தில் ஒன்-டவுன் நிலையில் விளையாடுவார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இடைவிடாத ஃபார்மில் இருக்கும் இளம் நட்சத்திரம், இந்தியன் பிரீமியர் லீக்கில் மூன்று சதங்கள் உட்பட காலண்டர் ஆண்டில் எட்டு சதங்களை அடித்துள்ளார். அவர் இதற்கு முன்பு பஞ்சாப் அணிக்காக உள்நாட்டு சுற்றுப் போட்டியில் விளையாடியுள்ளார், இந்த 3-ம் நிலைக்கு கில் புதியவர் அல்ல.

இது குறித்து ரோஹித் சர்மா கூறும்போது, “பயிற்சியாளர் ராகுல் திராவிட்டிடம், தனது அனைத்து கிரிக்கெட்டையும் நம்பர். 3 மற்றும் நம்பர். 4 இல் விளையாடியதாகவும், நம்பர் 3 இல் அணிக்காக சிறப்பாக செயல்பட முடியும் என்றும் ஷுப்மன் கில் கூறினார். மேலும் அணிக்கு இடது கை வீரர் தொடக்கத்தில் தேவை. வலது-இடது தொடக்கச் சேர்க்கையைத்தான் நாங்கள் முயற்சி செய்கிறோம். இது ஒரு நீண்ட கால விஷயமாக மாறும் என்று நம்புகிறோம். ஜெய்ஸ்வால் என்ற இடது கை வீரர் கிடைத்துள்ளார். அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறோம். ஜெய்ஸ்வால் உண்மையில் தன் இடத்தை நீண்ட காலம் சொந்தமாக்கிக் கொள்ள முடியும் என்று நம்புகிறோம்.” என்றார்.

ஜெய்ஸ்வால் அறிமுகம்! இந்திய அணி நிர்வாகம் இடது கை பேட்டர்கள் விவகாரத்தில் கவனம் செலுத்துவதால் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுக வீரராக களமிறங்குகிறார். அணியில் தற்போது முழுநேர அங்கீகரிக்கப்பட்ட இடது பேட்டர் இல்லை. ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோரை இடது கை பேட்டிங்கிற்கு பெரிதும் நம்பியுள்ளனர். ஜெய்ஸ்வால், டெஸ்ட் வடிவத்தில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 306வது வீரர் ஆவார், மேலும் மும்பையிலிருந்து சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், திலிப் வெங்சர்க்கார், ஜாகீர் கான் போன்ற ஜாம்பவான்கள் வரிசையில் தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் ஜெய்ஸ்வால்.

ஆட்டம் இன்று இரவு 7:30 மணிக்குத் தொடங்குகிறது. இந்திய அணி (உத்தேச லெவன்): 1 ரோஹித் சர்மா (கேப்டன்), 2 யஷஸ்வி ஜெய்ஸ்வால், 3 ஷுப்மான் கில், 4 விராட் கோலி, 5 அஜிங்க்யா ரஹானே, 6 ரவீந்திர ஜடேஜா, 7 KS பாரத், (Wk), 8 R அஷ்வின், 9. ஷர்துல் தாக்கூர், 10 ஜெய்தேவ் உனத்கட், 11 முகமது சிராஜ்

வெஸ்ட் இண்டீஸ் அணி: 1 கிரேக் பிராத்வைட் (கேப்டன்), 2 டேகனரைன் சந்தர்பால், 3 ரேமன் ரெய்ஃபர், 4 ஜெர்மைன் பிளாக்வுட், 5 அலிக் அதானாஸ், 6 ஜேசன் ஹோல்டர், 7 ரஹ்கீம் கார்ன்வால், 8 ஜோசுவா டி சில்வா (விகீ), 9. கிமார் ரோச், 10. அல்ஜாரி ஜோசப் 11. ஷனன் கேப்ரியல்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE