ODI WC Qualifier | இந்தியாவில் சந்திப்போம்: இலங்கை, நெதர்லாந்து வீரர்கள் உற்சாக போஸ்

By செய்திப்பிரிவு

ஹராரே: ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் இறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியை 128 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது இலங்கை அணி. இதன் மூலம் தகுதி சுற்றில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது இலங்கை.

வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்க உள்ள 8 அணிகள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 2 அணிகள் உலகக் கோப்பை தகுதிச் சுற்று மூலம் உறுதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

அவ்வகையில் அந்த 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்று ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்றது. மொத்தம் 10 அணிகள் இதில் பங்கேற்று விளையாடின. இதில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் உலகக் கோப்பை தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளன.

இன்று (ஜூலை 9) நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 47.5 ஓவர்களில் 233 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

234 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்கை நெதர்லாந்து அணி விரட்டியது. இருந்தும் 23.3 ஓவர்களில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 128 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.

“நாங்கள் சிறப்பான முறையில் கிரிக்கெட் விளையாடி உள்ளோம் என நினைக்கிறேன். அடுத்த சில மாதங்கள் உற்சாகமானது. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான சேஸ் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தது. இறுதிப் போட்டியில் சேஸ் செய்யக் கூடிய டார்கெட்டில் தான் எதிரணியை கட்டுப்படுத்தினோம். ஆனால், நாங்கள் பேட் செய்தபோது அவர்களது சுழற்பந்து வீச்சை முறையாக ஆட தவறிவிட்டோம். 10 அணிகள் கொண்ட உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு எங்களுக்கு மிகப்பெரியது. எங்களால் இந்தியாவில் சிறப்பான வெளிப்படுத்த முடியும் என்று நம்புகிறோம்” என நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வேர்ட்ஸ்.

“இந்த தொடரை வென்று நாங்கள் இந்தியா செல்வதில் மகிழ்ச்சி. ஜிம்பாப்வே ரசிகர்கள், இலங்கை ரசிகர்கள் மற்றும் உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு நன்றி. இந்த தொடரில் எங்கள் அணியில் சிறந்து விளங்கிய வீரர்கள் இந்தியாவிலும் அதை அப்படியே தொடர்வார்கள் என எதிர்பார்க்கிறேன்” என இலங்கை அணியின் கேப்டனா ஷனகா தெரிவித்துள்ளார்.

Loading...

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE