ஆஷஸ் 3-வது டெஸ்ட் | 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸி.யை வென்றது இங்கிலாந்து

By செய்திப்பிரிவு

லீட்ஸ்: நடப்பு ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இங்கிலாந்து அணி. இதன் மூலம் இந்த தொடரை வெல்லும் வாய்ப்பை இங்கிலாந்து அணி உயிர்ப்புடன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஹாரி ப்ரூக், மார்க் வுட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவி இருந்தது. 0-2 என்ற பின்னடைவுடன் ஹெட்டிங்லியில் மூன்றாவது போட்டியில் இரு அணிகளும் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி 237 ரன்களில் ஆட்டமிழந்தது.

26 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இருந்தும் 224 ரன்களுக்கு ஆஸி. ஆட்டமிழந்தது. 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டியது. 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி பெற்றது.

ஹாரி ப்ரூக் 93 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்க ஆட்டக்காரர் ஸாக் கிராவ்லி 55 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து வெளியேறினார். கிறிஸ் வோக்ஸ், 32 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மார்க் வுட், 8 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் ப்ரூக் மற்றும் கிறிஸ் வோக்ஸ் இடையே 59 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைந்தது இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகும். இந்தப் போட்டி இறுதிவரை விறுவிறுப்பாக இருந்தது.

முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட், இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் எடுத்த மார்க் வுட் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 8 பந்துகளில் 24 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 16 ரன்களும் அவர் எடுத்திருந்தார். இந்த தொடரின் அடுத்தப் போட்டி வரும் 19-ம் தேதி மான்செஸ்டர் நகரில் நடைபெற உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE