ODI WC 2023 | இந்தியா உடனான போட்டி மட்டுமல்ல; அனைத்துப் போட்டிகளும் எங்களுக்கு முக்கியம்: பாக். கேப்டன் பாபர் அஸம்

By செய்திப்பிரிவு

லாகூர்: இந்தியாவில் வரும் அக்டோபர் 5-ம் தேதி ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் பாகிஸ்தான் அணியும் விளையாட உள்ளது. இந்நிலையில், இந்த தொடர் குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸம் பேசியுள்ளார்.

ஆசிய மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் ஆசிய அணிகளின் செயல்பாடு அபாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய அணிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் அடங்கும். இந்தியா இரண்டு முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. பாகிஸ்தான் அணி ஒரு முறை பட்டம் வென்றுள்ளது.

“நாங்கள் உலகக் கோப்பை தொடரில் விளையாட உள்ளோம். இந்திய அணியுடன் விளையாட மட்டுமே அங்கு செல்லவில்லை. தொடரில் இந்தியா மட்டுமல்லாது 8 அணிகளுடன் நாங்கள் விளையாட உள்ளோம். இந்தியாவை வீழ்த்தினால் மட்டும் தான் நாங்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்று இல்லை. எங்களது கவனம் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகள் மீதும் உள்ளது. நிச்சயம் ஒரே ஒரு அணி மீது மட்டுமல்ல. அனைவருடனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அதில் வெல்லவே விரும்புகிறோம். அனைத்து சூழலுக்கும் ஏற்ற வகையில் விளையாடுவது தான் சவால் அதிகம். அதில் எங்களது சிறப்பான ஆட்டத்தை கொடுத்து பாகிஸ்தானை வெற்றி பெற செய்வோம்” என பாபர் அஸம் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் உலகக் கோப்பை தொடரில் வரும் அக்டோபர் 15-ம் தேதி, குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் விளையாட உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE