“உலகக் கோப்பையில் எப்படி பேட் செய்வேன் என இரவில் மனத்திரையில் காண்கிறேன்” - திலக் வர்மா

By செய்திப்பிரிவு

மும்பை: 20 வயதான திலக் வர்மா, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ள இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணியில் அவர் விளையாட உள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் திலக் வர்மா குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது கருத்தை தெரிவித்திருந்தார். “இந்திய அணிக்காக அனைத்து பார்மெட்டிலும் விரைவில் திலக் சர்மா விளையாடுவார். அதற்கான திறன் அவரிடம் உள்ளது” என அப்போது சொல்லி இருந்தார். அவர் சொன்னது சுமார் ஓராண்டுக்கு பிறகு நிஜமாகி உள்ளது. இப்போது தென் மண்டல அணிக்காக துலீப் கோப்பையில் திலக் வர்மா விளையாடி வருகிறார்.

“சில தினங்களுக்கு முன்னர் அம்மாவும், அப்பாவும் வீடியோ காலில் பேசி இருந்தனர். அப்போது உணர்ச்சி மிகுதியில் அவர்கள் இருவரும் அழுதனர். பின்னர் எனது பால்ய நண்பர் ஒருவர் எனக்கு போன் செய்து நான் இந்திய அணியில் தேர்வாகி இருப்பதாக தெரிவித்திருந்தார்.

களத்தில் விளையாடும் நுணுக்கம் குறித்து சச்சின் சார், ரோகித் பாய் (அண்ணன்) மற்றும் கோலி பாய் எனக்கு நிறைய ஆலோசனைகள் வழங்கி உள்ளனர். அது அனைத்தையும் அப்படியே நான் பின்பற்றி வருகிறேன். நீ நல்ல ஃபார்மில் இருந்தால் உன் ஆழ் மனதும் சரியான நிலையில் இருக்கிறது என அர்த்தம் என அவர்கள் சொல்வார்கள்.

ஒவ்வொரு நாள் இரவும் உலகக் கோப்பையில் நான் எப்படி பேட் செய்வேன் என மணக்கண்ணில் காட்சி செய்கிறேன். அதுவும் 40 அல்லது 50 ரன்களுக்கு அணி 4 அல்லது 5 விக்கெட்டுகளை இழந்திருந்தால் எனது அணுகுமுறை எப்படி இருக்கும் எனவும் அதில் யோசிப்பேன். அங்கிருந்து அணியை நான் எப்படி முன்னெடுத்து செல்வேன் என்பதும் இதில் அடங்கும்” என திலக் வர்மா தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களில் 397 மற்றும் 343 ரன்களை அவர் குவித்துள்ளார். டொமஸ்டிக் கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். அவரது எண்ணம் போலவே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை அவர் எட்டி பிடிக்கட்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE