இதுதான் ரியான் பராக்: கேலிகளுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் வீடியோ மூலம் பதில்

By செய்திப்பிரிவு

ஐபிஎல் தொடரின்போது மூத்த கிரிக்கெட் வீரர்களாலும், நிபுணர்களாலும் விமர்சிக்கப்பட்ட ரியான் ப்ராக் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

நடந்து முடிந்த 2023 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ரியான் ப்ராக் சரியாக விளையாடாததால் முன்னாள் கிரிக்கெட் வீரர்களாலும், நிபுணர்களாலும், ரசிகர்களாலும் விமர்சிக்கப்பட்டார். ரியான் களமிறங்கிய ஒவ்வொரு போட்டிகளின்போது அவரது பெயர் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆனது. அவருடைய ஒவ்வொரு செயல்களுக்கு அவர் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டார்.

ஆனால், தன் மீதான விமர்சனங்களுக்கு ரியான் பதிலளிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில், ’This is Riyan Parag: Raw and real’ என்ற தலைப்பில் ராஜஸ்தான் அணி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் 2023 - ஐபிஎல் போட்டிகளில் சரியாக விளையாடாத ரியான் ப்ராக்கை கேலி செய்து கிரிக்கெட் நிபுணர்களும், ரசிகர்களும் குறிப்பிட்ட சமூக வலைதள பதிவுகள் இடம்பெற்றிருந்தன.

அதனைத் தொடர்ந்து அந்த வீடியோவில் ரியான் ப்ராக் பேசும்போது, “கிரிக்கெட் ரசிகர்கள் என்னை விமர்சிக்கிறார்கள் என்றால், அவர்கள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்குகிறார்கள். அதனால் நான் விளையாடவில்லை என்றால், நிச்சயம் என்னை விமர்சிக்க அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் கிரிக்கெட் நிபுணர்களும், முன்னாள் வீரர்களும் சமூக வலைதளங்களில் ட்விட் செய்வதை புரிந்துகொள்ள முடிவதில்லை. அவர்கள் எனக்கு நேரடியாக குறுஞ்செய்தி அனுப்பலாம். உண்மையில் அதனை நான் ஏற்றுக் கொள்வேன்.

அஸ்வின் எனது பந்துவீச்சை மெருகேற்றினார். நான் கடந்த ஐபிஎல்லில் மும்பை, பெங்களூருக்காக விளையாட ஆர்வமாக இருந்தேன். ஆனால், என்னால் விளையாட முடியவில்லை என்பது வருத்தமாக இருந்தது. என் இன்ஸ்டாகிராம் பக்கம் என் வாழ்க்கையை பிரதிப்பலிக்கிறது... கிரிக்கெட்டை அல்ல. நான் கிரிக்கெட் விளையாடினால் அது தொடர்பாக பதிவிடுவேன். இல்லை என்றால் கேமிங், கோல்ஃப் பற்றி பதிவிடுவேன். இதனை மக்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். ஆனால், எல்லாவற்றையும் என்னால் கட்டுப்படுத்த முடியாது” என்று பேசியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE