100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஸ்டீவ் ஸ்மித்: சுழற்பந்து வீச்சாளர் டு பிரதான பேட்ஸ்மேன்!

By செய்திப்பிரிவு

ஹெட்டிங்லி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அபார பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஸ்டீவ் ஸ்மித், இன்று தனது 100-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார். அணிக்கு சுழற்பந்து வீச்சாளராக நுழைந்த அவர் பிரதான பேட்ஸ்மேனாக ஜொலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான பேட்ஸ்மேனாகவும் அவர் அறியப்படுகிறார். ‘எங்கள் தலைமுறையின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்’ என ஸ்மித்தை கடந்த மாதம் இந்திய வீரர் விராட் கோலி புகழந்திருந்தார். கடந்த வாரம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,000 ரன்களை கடந்து அசத்தினார். நடப்பு ஆஷஸ் தொடரில் இன்று ஹெட்டிங்லியில் நடைபெறும் போட்டி அவரது 100-வது டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ளது.

34 வயதான ஸ்மித், கடந்த 2010-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை மொத்தம் 99 போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 9,113 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 32 சதங்கள் மற்றும் 37 அரை சதங்கள் அடங்கும். அதிகபட்சமாக ஒரே இன்னிங்ஸில் 239 ரன்கள் எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 59.56. ஆஸி. அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் இப்போதைக்கு 4-வது இடத்தில் உள்ளார். 160 கேட்ச்களை பிடித்துள்ளார். 19 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

ஸ்மித், தனது தொடக்க கால டெஸ்ட் கிரிக்கெட் கேரியரில் லெக் ஸ்பின் பந்துவீச்சு திறனுக்காக தான் அணியில் தேர்வு செய்யப்பட்டார். டொமஸ்டிக் கிரிக்கெட்டில் அவர் விளையாடிய போது ஷேன் வார்ன் அவருக்கு லெக் ஸ்பின் வீசும் நுணுக்கங்களை போதித்துள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் அவரது பேட்டிங் ஆவரேஜ் 50+. டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அறிமுகத்தை அடுத்து 2010-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்ஸில் பந்து வீசும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 அரை சதம் மற்றும் 3 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி இருந்தார். 9-வது பேட்ஸ்மேனாக களம் கண்டு விளையாடி உள்ளார். தற்போது 3-வது பேட்ஸ்மேனாக ஆஸி. அணியின் பேட்டிங் ஆர்டரில் விளையாடி வருகிறார். தனது டெஸ்ட் கிரிக்கெட் கேரியரில் 3 முதல் 9-வது பேட்டிங் பொசிஷன் வரை ஸ்மித் விளையாடி உள்ளார்.

திருப்புமுனை ஏற்படுத்திய இந்திய பயணம்: சுமார் இரண்டு ஆண்டு காலம் டெஸ்ட் அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. 2013-ல் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட ஆஸி. அணியில் இடம் பிடித்தார். இம்முறை பேக்அப் பேட்ஸ்மேனாக அணியில் இடம். மொகாலியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 92 ரன்கள் குவித்தார். அதன் பிறகு ஆடும் லெவனில் அவருக்கான இடம் உறுதியானது. அது முதல் அபாரமாக பேட் செய்து வருகிறார். அதன் மூலம் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆனார். கிரீஸில் ஒரு இடத்தில் நின்று விளையாடுவது ஸ்மித்துக்கு அறவே பிடிக்காது. அன்-ஆர்த்தோடாக்ஸ் முறையில் பேட் செய்யும் அவர் தனது கால் நகர்வுகளை மாற்றியபடியே ரன் குவிப்பார். அதனால் அவரை வீழ்த்த இது தான் வழி என பவுலர்கள் ஒரு லைனை பிடித்து, பந்து வீசுவது சிரமம். அவரும் தனது தனித்துவ திறனை களத்தில் அபாரமாக செயல்படுத்தி வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE