ஆஷஸ் | ஆஸி.யை விமர்சித்த ரிஷி சுனக்: ஆதரித்த அந்தோணி அல்பனீஸ்!

By செய்திப்பிரிவு

லண்டன்: நடப்பு ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வீரர் அவுட் செய்யப்பட்ட விதம் சர்ச்சையாகியுள்ள நிலையில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஆஸ்திரேலிய அணியை விமர்சித்துள்ளார். மறுபக்கம் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தங்கள் நாட்டு அணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். விளையாட்டு விவகாரத்தில் இருநாட்டு பிரதமர்களும் கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்பதை பார்ப்போம்.

பந்து டெட் என எண்ணி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது ஸ்ட்ரைக்கில் இருந்த பேர்ஸ்டோ கிரீஸை விட்டு நகர்ந்து சென்றார். அப்போது ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி, ஸ்டம்புகளை தகர்த்தார். அதையடுத்து அவர் அவுட் என அறிவிக்கப்பட்டது. இது கிரிக்கெட் உலகில் விவாதப் பொருளானது. இந்நிலையில், இது தொடர்பாக ரிஷி சுனக் மற்றும் அந்தோணி அல்பனீஸ் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

ரிஷி சுனக்: “ஆஸ்திரேலிய பாணியில் தங்கள் அணி ஆட்டத்தில் வெற்றி பெற விரும்பவில்லை என கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்திருந்தார். கேம் ஸ்பிரிட்டை ஆஸி. தகர்த்து விட்டதாகவும் ஸ்டோக்ஸ் தெரிவித்திருந்தார். அதனை பிரதமர் ரிஷி சுனக் ஏற்கிறார். லார்ட்ஸ் போட்டியில் ஸ்டோக்ஸின் அபார ஆட்டத்தை பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து எழுச்சி பெறும் என நம்புகிறோம்” என பிரிட்டன் பிரதமரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அந்தோணி அல்பனீஸ்: “ஆஸ்திரேலிய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியை எண்ணி பெருமை கொள்கிறேன். ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அணிக்கு வெற்றி தேடி தந்துள்ளனர். அதே பழைய ஆஸி. அணியின் பாணியிலான வெற்றி. வெற்றியுடன் நாடு திரும்பும் அவர்களை வரவேற்க ஆவலுடன் காத்துள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE