“இது எனது கனவு” - இந்தியா வந்த அர்ஜென்டினா கோல்கீப்பர் மார்டினெஸ் உற்சாகம்

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: அர்ஜென்டினா அணியின் கோல்கீப்பர் எமிலியானோ மார்டினஸ் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். கொல்கத்தாவுக்கு வந்துள்ள அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தனது தெற்காசிய நாடுகள் சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக அவர் இந்தியா வந்துள்ளார்.

30 வயதான எமிலியானோ மார்டினஸ், கடந்த ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணியின் அசாத்திய கோல்கீப்பர். தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட அவருக்கு தங்க கையுறை (கோல்டன் கிளவ்) விருது வழங்கப்பட்டது. இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வென்றது அர்ஜென்டினா. அதற்கு பிரதான காரணம் மார்டினஸின் கோல் கீப்பிங் திறன்தான்.

இந்தியாவில் இயங்கி வரும் மோஹன் பகான் கால்பந்தாட்ட அணியை சந்திக்கும் வகையில் தற்போது அவர் கொல்கத்தா வந்துள்ளார். அந்த அணியின் ஹோம் கிரவுண்ட் என அறியப்படும் சால்ட் லேக் மைதானத்தில் ‘பீலே-மரடோனா-சோபர்ஸ் கேட்’டினை அவர் நாளை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்வில் அவர் மோஹன் பகான் அணியின் உறுப்பினர்கள் சிலரை சந்திக்கிறார். அதோடு அந்த கிளப் அணியின் உட்கட்டமைப்பு வசதிகளையும் பார்வையிட உள்ளார்.

“நான் மிகவும் உற்சாகமாக உணர்கிறேன். இந்திய நாட்டுக்கு வர வேண்டும் என்பது கனவு. நான் இந்தியா வருவேன் என உறுதி கொடுத்திருந்தேன். அதன்படி இப்போது வந்துள்ளேன்” என மார்டினஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE