ஆஷஸ் 2-வது டெஸ்ட் | ஸ்டோக்ஸ் அபார ஆட்டம்; 43 ரன்களில் ஆஸி. வெற்றி

By செய்திப்பிரிவு

லார்ட்ஸ்: நடப்பு ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 43 ரன்களில் வென்றுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணிக்காக அபாரமாக பேட் செய்து, 155 ரன்கள் குவித்தார் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். இருந்தும் அவரால் தனது அணியை வெற்றி பெற செய்ய முடியவில்லை.

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 416 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி 325 ரன்கள் மட்டுமே எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸை 91 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா தொடங்கியது. 279 ரன்களுக்கு அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து அணி விரட்டியது. 45 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. ஜாக் கிராலி, போப், ஜோ ரூட் மற்றும் ப்ரூக் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இணைந்து 132 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். டக்கெட், 83 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த பேர்ஸ்டோ, 10 ரன்களில் வெளியேறினார். பிராட் உடன் இணைந்து 108 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஸ்டோக்ஸ். 214 பந்துகளை எதிர்கொண்ட அவர் 155 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது 301 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது இங்கிலாந்து. அதன் பின்னர் 26 ரன்கள் மட்டுமே சேர்த்து எஞ்சிய 3 விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் மூலம் 43 ரன்களில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் மற்றும் ஹேசல்வுட் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். கிரீன், ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்தார்.

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது. இந்த தொடரின் மூன்றாவது போட்டி வரும் 6-ம் தேதி தொடங்குகிறது. முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய ஸ்டீவ் ஸ்மித், இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE