Ashes 2023: ஆஸ்திரேலியாவின் மருந்தை அவர்களுக்கே புகட்டிய இங்கிலாந்து - இத்தனை எகிறு பந்துகளா?

By ஆர்.முத்துக்குமார்

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் ஆட்டத்திலும் விறுவிறுப்பிற்குப் பஞ்சமில்லை. ஆட்டம் முடியும் போதும் இங்கிலாந்து 45/4 என்ற நிலையிலிருந்து மீண்டெழுந்து 114/4 என்று உள்ளது. வெற்றி பெற இன்னும் 257 ரன்கள் தேவை என்ற நிலையில் பென் ஸ்டோக்ஸ் 29 ரன்களுடனும், பென் டக்கெட் 50 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.

ஆஸ்திரேலியா பெரிதும் விதந்தோதப்பட்ட ‘பாஸ்பால்’ இங்கிலாந்து அணுகுமுறையை கேலிக்குரியதாக்கி விட்டது. டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங்கில் மட்டும்தான் டி20 ஒருநாள் போட்டிகளின் தாக்கம் என்று நினைத்துக் கொண்டிருந்தோம், ஆனால் களவியூகம் பந்து வீச்சு உள்ளிட்டவையும் டி20, ஒருநாள் தாக்கத்துக்கு உட்பட்டிருப்பதையே இந்த டெஸ்ட் போட்டி காட்டுகிறது.

ஏனெனில் இரு அணிகளுமே ஒரு கட்டத்தில் ஸ்லிப் இல்லாமல் டீப்பில் நிறுத்தி வைத்து ஷார்ட் பிட்ச் எகிறு பந்துகளை வீசி விக்கெட்டுகளை வீழ்த்துவதை இந்த டெஸ்ட் போட்டியில் பார்க்க முடிந்தது. குறிப்பாக இங்கிலாந்தின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா செய்த அதே களவியூகம் ஷார்ட் பிட்ச் உத்தியை, இங்கிலாந்து பவுலர்களும் கையாண்டு ஆஸ்திரேலியாவை 2வது இன்னிங்சில் 279 ரன்களுக்கு மடக்கியதைச் சொல்லலாம்.

இதில் ஆச்சரியம் என்னவெனில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஷார்ட் பிட்ச் போடுவதென்பது நம்மை நாமே இடுக்காட்டுக்கு அழைத்துச் செல்வதற்கு சமம் என்று கூறப்படுவதுண்டு. கபில் தேவ் ஒருமுறை 'don't bowl short pitch bowling to aussies' என்று கூறக்கேட்டிருக்கிறோம். அந்த அளவுக்கு ஷார்ட் பிட்ச் பவுலிங் உத்தியைக் காலி செய்யும் பேட்டிங் வரிசை இன்று ஷார்ட் பிட்ச் பந்துக்கு இரையாகிறது என்றால் நிச்சயம் டி20, ஒருநாள் போட்டிகளின் தாக்கமே காரணம் என்று நாம் கூறிவிட முடியும்.

நேற்று ஆட்டம் தொடங்கிய போது கொஞ்ச நேரம் ஆஃப் ஸ்டம்ப் ஸ்விங்கை முயற்சி செய்த இங்கிலாந்து பவுலர்கள் ஷார்ட் பிட்ச் பவுலிங் உத்திக்கு மாறினர். 4ம் நாள் ஆட்டமான நேற்று ஒரு டெஸ்ட் போட்டியில் இத்தனை ஷார்ட் பிட்ச் பந்துகளா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு ஷார்ட் பிட்ச் பவுலிங் நேற்று இங்கிலாந்தை ஆதிக்கம் செலுத்தியது. ஆஸ்திரேலியா ஆல் அவுட் ஆகும் வரை ஷார்ட் பிட்ச் பவுலிங்கை நிறுத்தவில்லை. அதுவும் காலை நகர்த்த முடியாத நிலையில் இறங்கிய நேதன் லயனுக்கும் ஷார்ட் பிட்ச் பவுலிங்கை அவரது உடலை நோக்கி வீசியது அநாகரிகத்தின் உச்சமாகத் தெரிந்தது. உணவு இடைவேளைக்குப் பிறகு இங்கிலாந்து வீசிய பந்துகள் கிட்டத்தட்ட அனைத்துமே ஷார்ட் பிட்ச் பந்துகளே. அதாவது 98% ஷார்ட் பிட்ச் பந்துகள் என்கிறது ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ புள்ளி விவரம்.

முதலில் உஸ்மான் கவாஜா இந்தத் தொடரில் 300 ரன்களை அடித்த பிறகு ஷார்ட் பிட்ச் உத்திக்கு லாங் லெக்கில் டாப் எட்ஜ் ஆகி வெளியேறினார். உடனேயே ஸ்டீவ் ஸ்மித்துக்கு தொடர் ஷார்ட் பிட்ச் பந்துகளை அம்பு போல் தொடுக்க அவரது ஈகோ குனிய இடம்கொடுக்காமல் ஆடினார் டீப்பில் கேட்ச் ஆனார். ட்ராவிஸ் ஹெட்டுக்கும் அருமையான ஷார்ட் பிட்ச் பந்து அதை அவர் தடுத்தாட முயல பந்து எங்கு சென்றது என்றே அவருக்கு தெரியவில்லை, ஆனால் ஷார்ட் லெக்கில் ரூட் அற்புதமாக கேட்சை எடுக்க 10 ரன்களில் 3 விக்கெட்டுகளை சடுதியில் இழந்தது ஆஸ்திரேலியா.

களவியூகத்தை பரவலாக்கி ஷார்ட் பிட்ச் பவுலிங் வீசும் போது ரன்கள் வருவது கடினம், அலெக்ஸ் கேரியும், கேமரூன் கிரீனும் ஷார்ட் பிட்ச் உத்தியை நன்றாக எதிர்கொண்டாலும் 13 ஓவர்களில் 17 ரன்களே வந்தது. அலெக்ஸ் கேரி 73 பந்துகள் போராடி 21 ரன்களை எடுத்தார். ஆனால் கடைசியில் ஷார்ட் பிட்ச் உத்தியில் மடிந்தார். மீண்டும் ஷார்ட் லெக்கில் கேட்ச். கிரீன் 67 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து இதே ஷார்ட் பிட்ச் உத்திக்கு டீப்பில் கேட்ச் ஆனார்.

பிராட், டாங், ராபின்சன், குறிப்பாக பென் ஸ்டோக்ஸ் இந்த ஷார்ட் பிட்ச் பவுலிங்கில் அதி தீவிரம் காட்டினர். கமின்ஸும் அதே போல் ஏகப்பட்ட ஷார்ட் பிட்ச் பந்துகளில் கைகள், தோள்பட்டையிலெல்லாம் வாங்கி நின்றார். ஆனால் கடைசியில் அவரும் அதே உத்திக்கு இரையானார். ஆனால் இங்கிலாந்து உதிரிகள் வகையில் 36 ரன்களை விட்டுக் கொடுத்தது நிச்சயம் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆஸ்திரேலியா 187/2 என்பதிலிருந்து 279 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஷார்ட் பிட்ச் உத்திக்கு பலியானது.

இங்கிலாந்து தரப்பில் ஸ்டுவர்ட் பிராட் 4 விக்கெட்டுகளையும் ஜோஷ் டாங், ஆலி ராபின்சன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தொடர்ந்து 371 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆடிவரும் இங்கிலாந்து மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கமின்ஸின் அதியற்புத பவுலிங்குக்கு இரையாகி 45/4 என்று தடுமாறினர், கடைசியில் பென் ஸ்டோக்ஸ், பென் டக்கெட் இங்கிலாந்துக்கு கொஞ்சம் நம்பிக்கை கொடுத்துள்ளனர். இன்று 5-ம் நாள் மீண்டும் ஒரு விறுவிறுப்பான முடிவு காத்திருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்