உலக கோப்பை கிரிக்கெட் | ஆன்லைனில் டிக்கெட் விற்பனை: டிஎன்சிஏ தலைவர் அசோக் சிகாமணி

By செய்திப்பிரிவு

சென்னை: "ஐசிசி, பிசிசிஐ அறிவுரைகளின்படிதான் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனையெல்லாம் இருக்கும். பெரும்பாலும், ஆன்லைன் மூலமாகவே டிக்கெட் விற்பனைகள் தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கிறோம்" தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அசோக் சிகாமணி கூறியுள்ளார்.

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னையில் ஞாயிறன்று 16 அணிகள் பங்கேற்கின்ற ஐவர் கால்பந்தாட்ட‌ போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக‌‌ தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அசோக்சிகாமணி மற்றும் இந்திய கால்பந்தாட்ட வீரர் தனபால்கணேஷ், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அசோக் சிகாமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், அதன்கீழ் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், அதன்கீழ்தான் ஒவ்வொரு மாநிலத்தின் கிரிக்கெட் சங்கங்களும் பணியாற்றும். எனவே, அவர்கள் எப்படி அறிவுரைகள் கொடுக்கிறார்களோ, அதன்படிதான், உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனையெல்லாம் இருக்கும்.

பெரும்பாலும், ஆன்லைன் மூலமாகவே டிக்கெட் விற்பனைகள் தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கிறோம். பொதுவாக ஜூலை 15-க்குப் பிறகு, ஆகஸ்ட் முதல் வாரத்துக்குள்ளாகவே, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இருந்து இங்கு வந்துவிடுவார்கள். நாங்கள் மைதானத்தை அவர்களிடம் வழக்கம்போல கொடுத்துவிடுவோம்.

அவர்கள் குறிப்பிடும் தேதிகளில் இருந்தே, மைதானத்தின் விளக்குகள் உள்ளிட்ட அனைத்தையும் சரிபார்த்து அவர்களிடம் ஒப்படைத்துவிடுவோம். பொதுவாகவே, நம் நாட்டைப் பொருத்தவரை பிட்ச்சில் உள்ள மண் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்காது. தற்போது அதையெல்லாம் மாற்றுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். ஆசிய அளவில் எடுக்கப்படும் விக்கெட்டுகளை எடுத்துக்கொண்டாலே, அது சுழற்பந்து வீச்சால் எடுத்த விக்கெட்டாகத்தான் இருக்கும்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE