ஆஷஸ் டெஸ்ட் | காயத்தை பொருட்படுத்தாமல் களமிறங்கிய நேதன் லயன் - எழுந்துநின்று பாராட்டிய ரசிகர்கள்

By செய்திப்பிரிவு

லார்ட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்காக காயம்பட்ட நிலையிலும் பேட்டிங் செய்ய களமிறங்கிய நேதன் லயனின் செயல் பாராட்டுகளை பெற்றுவருகிறது.

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டி ஆஸ்திரேலியாவின் மற்ற வீரர்களைவிட சுழற்பந்து வீச்சாளர் நேதன் லயனுக்கு சிறப்பு வாய்ந்த போட்டி. இந்தப் போட்டியில் பங்கேற்றதன் மூலம் தொடர்ச்சியாக 100 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற முதல் பந்துவீச்சாளர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். 5 ஆண்டுகளில் எந்த பந்துவீச்சாளரும் படைக்காத சாதனை இது. இதற்கு முன் அலெஸ்டர் குல், ஆலன் பார்டர், மார்க் வாக், சுனில் கவாஸ்கர், மெக்கல்லம் என்று பேட்ஸ்மேன்கள் மட்டுமே தொடர்ச்சியாக 100 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றிருந்தனர். அந்த வகையில் இந்த சாதனையில் பங்குபெறும் முதல் பந்துவீச்சாளரானார் லயன்.

ஆனால், ஆட்டத்தின் இரண்டாம் நாளில் எதிர்பாராதவிதமாக இங்கிலாந்து அணி வீரர்கள் அடித்த பவுண்டரியை தடுக்கும் முயற்சியில் நேதன் லயனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சக வீரர்களின் உதவியுடன் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு சென்ற அவர் அதன்பின் களத்துக்கு திரும்பவில்லை. ஆட்டத்தின் மூன்றாம் நாளுக்காக ஆஸ்திரேலிய வீரர்கள் களத்துக்கு வரும்போது ஊன்றுகோல் உதவியுடன் மைதானத்தில் நடந்து வந்தார் லயன். இதனால் போட்டியில் இருந்து லயன் வெளியேறுவார் என்று பேசப்பட்டுவந்தது.

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் நான்காம் நாளில் காயத்தையும் பொருட்படுத்தாமல் பேட்டிங் செய்ய களமிறங்கினார். வலியுடன் அவர் களத்துக்கு வரும்போது மொத்த மைதானமும் அவரை எழுந்துநின்று பாராட்டியது. இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. 9வது விக்கெட்டுக்கு களம்புகுந்த லயன், கிட்டத்தட்ட ஐந்து ஓவர் வரை களத்தில் இருந்தார். 13 பந்துகளைச் சந்தித்த அவர் ஒரு பவுண்டரி அடித்து கடைசி விக்கெட்டாக அவுட் ஆனார்.

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 370 ரன்கள் எடுத்துள்ளது. 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE