கே.எல்.ராகுலுக்கு சிவராமகிருஷ்ணனின் பொன்னான அறிவுரை!

By ஆர்.முத்துக்குமார்

என்னதான் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் ஆடி பேட்டிங்கிலும் பவுலிங்கிலும் பெரிய பெரிய சம்பவங்கள் செய்தாலும் ஐபிஎல் தொடரில் ஆடி அதுவும் மார்க்கி அணிகளான சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ அணிகளில் ஆடினால்தான் இந்திய அணியில், அதுவும் டெஸ்ட் அணியில் நேரடியாகவே வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை உருவாகிய பிறகே, காயமடைந்த கே.எல்.ராகுல் உள்நாட்டுக் கிரிகெட்டில் ஆடிவிட்டு தன் ஆட்டத்திறன், உடல் திறனை சோதித்து விட்டு இந்திய அணிக்குத் திரும்ப வேண்டும் என்று முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சலார் லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ரஹானே படாத பாடு பட்டு ரஞ்சியில் ஆடினாலும் ஐபிஎல் 2023 தொடரில் சிஎஸ்கே அணிக்காக ஆடி தன் ஸ்ட்ரைக் ரேட்டைக் காட்டிய பிறகுதான் இந்திய அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டார். உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆடிவரும் சர்பராஸ் கான், கருண் நாயர் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பே கிடைப்பதில்லை. இப்படி எதார்த்த நிலை இருக்க லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன், கே.எல்.ராகுலுக்கு அறிவுரை கொடுத்துள்ளார்.

ஆனால், அவரது அட்வைஸ்தான் உண்மையில் சரியான அட்வைஸ். ஆனால் யார் இதைக் கடைப்பிடிப்பார்கள். ரோஹித் சர்மா, விராட் கோலி, ஏன் சுப்மன் கில் கூட இப்போதெல்லாம் நேரடியாக காயத்திலிருந்து உள்நாட்டு கிரிக்கெட் ஆடாமலேயே இந்திய அணிக்குள் பிரவேசிக்க முடியும் போது ராகுலை மட்டும் இப்படி பழைய பாணியில் நிரூபித்து வரும்படியாக கூறுவது கே.எல்.ராகுல் பார்வையில் நியாயம் செய்வதாக இருக்காது. ஆனால் லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன் அட்வைஸ் நூற்றுக்கு நூறு சரியானதே.

சிவராமகிருஷ்ணன் திடீரென இதைக் கூறுவதற்குக் காரணம் ஜூன் 28ம் தேதி, ஊடகங்களில் வெளிவந்த செய்தியே. அதாவது, “குட் நியூஸ், கே.எல்.ராகுல் பேட்டிங் பயிற்சியை இரு வாரங்களில் தொடங்குகிறார்” என்பதே அந்த செய்தி. இதற்குப் பதிலடியாகத்தான் லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன், தன் சமூக ஊடகப் பக்கத்தில், அவரை உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆடவைத்து அவரது உடல் தகுதியை உறுதி செய்து கொள்ள வேண்டும். இந்திய அணியில் நுழைவது கே.எல்.ராகுலுக்கு கடினமானதே. வலையில் பயிற்சி செய்து உடனே சர்வதேச கிரிக்கெட்டுக்குத் தயாராகிவிடுவார் என்று கூறியுள்ளார்.

அதாவது வலைப்பயிற்சியில் ஆடினால் மட்டும் போதாது, இந்திய அணியில் நுழைய, உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆட வேண்டும் என்கிறார். இது பழைய அட்வைஸ் என்றாலும் கோல்ட் அட்வைஸ்தான். ஆனால் இன்றைய இளம் வீரர்கள் கடினமான பாதையைத் தேர்வு செய்ய தயங்குபவர்கள். ஏனெனில் உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆடி சோபிக்க முடியும். பெரிய அளவில் ரன்களைக் குவிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை இவர்களுக்கு இருப்பதில்லை. ஏற்கெனவே இருக்கும் செல்வாக்கை வைத்து கொண்டு உள்ளே மீண்டு நுழைவதையே விரும்புகின்றனர். 5 போட்டிகள் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுத்தால் ஒரு 50 அடிக்க முடியாதா?

அந்த 50 ரன்கள் இருந்தால் போதும் சுனில் கவாஸ்கர் உட்பட எல்லோரும் ‘ஒரு பெரிய சதம் காத்திருக்கிறது’ என்று கூறுவார்கள். கேப்டன் ரோஹித் சர்மா, காயமடைந்ததை வைத்து ஒரு வீரரின் கடந்த ஆட்டத்திறனை குறைத்து மதிப்பிடக்கூடாது என்று முட்டுக் கொடுப்பார். கே.எல்.ராகுல் எப்படி உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆடுவார் சிவராமகிருஷ்ணன்? இன்று இந்திய கிரிக்கெட்டை எதிர்கொண்டிருக்கும் முக்கிய பிரச்சினையே ஐபிஎல் கிரிக்கெட் அணித்தேர்வின் முக்கியக் காரணியாக இருக்கும் போது உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடி பயன் என்ன என்பதுதானே? ஆகவே இந்தப் போக்கை சரி செய்துவிட்டு வீரர்களை உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடச்சொல்வதுதான் சரியாக இருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE