9-ம் நிலையில் இறங்கி 86 பந்துகளில் 122 ரன்கள் விளாசிய ஹர்ஷித் ராணா: இந்திய அணியின் அடுத்த ஆல்ரவுண்டர்?

By ஆர்.முத்துக்குமார்

நடைபெற்று வரும் துலிப் டிராபி சிவப்புப் பந்து கிரிக்கெட்டில் வடக்கு மண்டல் அணி, வடகிழக்கு மண்டல அணியை எதிர்த்து பெங்களூருவில் விளையாடி வருகிறது. இதில் வடக்கு மண்டலம் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 540 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதில் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் 9-ம் நிலையில் இறங்கிய ஹர்ஷித் ராணா 86 பந்துகளில் 122 ரன்கள் விளாசியதே. இவரது இன்னிங்ஸ் அணியின் தேர்வுக்குழுவினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவருக்கு வயது 21 என்பது குறிப்பிடத்தக்கது.

122 ரன்களை 86 பந்துகளில் எடுக்க முடிந்தது எப்படி எனில் அதில் 12 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்சர்களை விளாசியுள்ளார் ஹர்ஷித் ராணா. இவர் டெல்லியைச் சேர்ந்த அதிரடி ஆல்ரவுண்டர். வலது கை வேகப்பந்து வீச்சாளர். பவுலிங் ஆல்ரவுண்டர். ஆனால் பேட்டிங்கில் தன் அதீதத் திறமையை வெளிக்காட்ட காத்திருந்தார், அதற்கான வாய்ப்பு கிடைத்ததும் பின்னி எடுத்து விட்டார். இந்த இன்னிங்ஸையும் சேர்த்து முதல் தர கிரிக்கெட்டில் ஹர்ஷித் ராணா 274 ரன்களை 6 போட்டிகளில் எடுத்துள்ளார். இதில் 30 பவுண்டரிகள், 18 சிக்சர்கள் அடங்கும். அதாவது பெரும்பாலும் பந்துகளை பவுண்டரிகளில் டீல் செய்கிறார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் நிதிஷ் ராணாதான் இவரை கொல்கத்தா உரிமையாளரிடம் அறிமுகப்படுத்தி அணியில் வாய்ப்பு பெற்றுத் தந்தார். இதற்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியில் நெட் பவுலராக இருந்துள்ளார். மணிக்கு 140 கி.மீ. வேகம் வரை வீசக்கூடியவர்.

கொல்கத்தாவுக்காக அவர் கடந்த ஐபிஎல் தொடரில் ஆடிய போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக அதிகபட்சம் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மொத்தம் 5 விக்கெட்டுகளை தனக்கு கிடைத்த வாய்ப்பில் கைப்பற்றியுள்ளார்.

அவர் தனது இந்த இன்னிங்ஸ் பற்றிக் கூறும்போது, “ஆம்! இதுதான் என் இயல்பான ஆட்ட முறை. இந்த சீசன் முழுதுமே இப்படித்தான் வேகமாக ஆடுகிறேன். ஆட்ட சூழ்நிலை முக்கியம்தான், ஆனாலும் என் பேட்டிங் இப்படித்தான் இருக்கும். ஹிட் பண்ணக்கூடிய பகுதியில் பந்து விழுந்தால் அடிதான். இதில் எனக்கு இருவேறு சிந்தனைகள் இல்லை. கிளப் மட்டத்திலிருந்தே என் பயிற்சியாளர்கள் என்னை பேட் செய்ய உற்சாகமூட்டி வந்துள்ளனர்.

கேகேஆர் அணியில் கோச் பாரத் அருண் மற்றும் ஓம்கார் சால்வி இருவரும் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தார்கள், குறிப்பாக வெள்ளை பந்து வீசுவதன் லெந்த்தையும் சிவப்புப் பந்து வீசும் லெந்த்தையும் அட்ஜஸ்ட் செய்யச் சொல்லி கற்றுக் கொடுத்தது கிரிக்கெட்டின் மிகப்பெரிய பாடமாகும். அவர்கள் எனக்கு வாழ்க்கையையும் சொல்லிக் கொடுக்கிறார்கள், என்னை தங்கள் மகன் போல் நடத்துகின்றனர்.

நிதிஷ் ராணா எனக்கு பெரிய ஆதரவு கொடுக்கிறார். அவர் மட்டும் இல்லையெனில் கொல்கத்தாவுக்கு நான் ஆடியிருக்க முடியாது, நான் இன்று கிரிக்கெட்டில் இருக்கிறேன் என்றால் அதற்கு நிதிஷ் ராணாதான் காரணம்” என்கிறார் ஹர்ஷித் ராணா.

இப்போது பேட்டிங்கிலும் இவர் தன் திறமையை, அதுவும் 9-வது நிலையில் இறங்கிக் காட்டியிருப்பதால் இவர் இந்திய அணியின் அடுத்த அனைத்து வடிவ ஆல்ரவுண்டராக வர வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் பண்டிதர்கள் கருதுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE