இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டுள்ளதை புரிந்துகொள்வது கடினம்: சவுரவ் கங்குலி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு மீண்டும் திரும்பிய நிலையில் அஜிங்க்ய ரஹானே துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதை புரிந்துகொள்வது கடினம் என இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

மோசமான பார்ம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கான இடத்தை அஜிங்க்ய ரஹானே கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரிக்கு பின்னர் இழந்தார். சுமார் 18 மாதங்களுக்கு பிறகு இந்த மாத தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணிக்காக ரஹானே மீண்டும் களமிறங்கினார். இந்த ஆட்டத்தில் அவர், முறையே 89 மற்றும் 46 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி ஜூலை 2-வது வாரத்தில் மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடருக்கு இந்திய அணியின் துணை கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு திரும்பி வந்து ஒரு ஆட்டத்தில் மட்டுமே பங்கேற்ற நிலையில் 35 வயதான ரஹானேவுக்கு மீண்டும் துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியதாவது:

ரஹானே துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதை நான் பின்னோக்கிய நகர்வாக கருதவில்லை.18 மாதங்களாக அணிக்காக விளையாடாமல் ஒரே ஒரு ஆட்டத்தில் விளையாடிய நிலையில் ரஹானேவை துணை கேப்டனாக நியமித்துள்ளனர். இதற்கு பின்னால் உள்ள சிந்தனை செயல்முறையை புரிந்து கொள்ள முடியவில்லை.

அணியில் ரவீந்திர ஜடேஜா உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் நீண்ட காலமாக உறுதியாக செயல்பட்டு வரும் அவர், துணை கேப்டனாக நியமிக்கப்பட வேண்டியவர். ஆனால் 18 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வந்து உடனடியாக துணை கேப்டனாக மாறுவது என்பது எனக்குப் புரியவில்லை. வீரர்கள் தேர்வில் தொடர்ச்சியும், நிலைத்தன்மையும் இருக்க வேண்டும்.

தேர்வுக்குழுவினருக்கு புஜாரா பற்றி தெளிவான யோசனை இருக்க வேண்டும். அவர், இனி டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டுமா அல்லது இளைஞர்களுடன் தொடர விரும்புகிறீர்களா என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். இதுதொடர்பாக புஜாராவிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். புஜாரா போன்ற ஒருவரை கைவிட முடியாது. அவரை தேர்வு செய்வதும் பின்னர் நீக்குவதும் போன்ற பணியை மேற்கொள்ள முடியாது. இதேபோன்று தான் அஜிங்க்ய ரஹானேவும்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரஞ்சி டிராபி, இரானி டிராபி, துலீப் டிராபியில் டன் கணக்கில் ரன் குவித்துள்ளார். அதனால்தான் அவர் இந்திய அணியில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். சர்பராஸ் கான் கடந்த 3 ஆண்டுகளாக ரன்கள் குவித்துள்ளார். அந்த ரன்களுக்கு ஒரு கட்டத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

இதே நிலைதான் அபிமன்யு ஈஸ்வரனுக்கும் உள்ளது. அவர், கடந்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்துள்ளார். சர்பராஸ் கானும், அபிமன்யு ஈஸ்வரனும் இந்திய அணி தேர்வில் தவிர்க்கப்பட்டிருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, ஆனால் எதிர்காலத்தில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு நல்ல தேர்வு.

வேகப்பந்து வீச்சில் சர்பராஸ் கானுக்கு விளையாட தெரியாது என கூறுகின்றனர். அவருக்கு அந்த பிரச்சினை இருந்திருந்ததால் இந்தியா முழுவதும் நடைபெற்றுள்ள போட்டிகளில் இவ்வளவு ரன்கள் எடுத்திருக்க மாட்டார். வேகப்பந்து வீச்சுக்கு எதிராக அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை, அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன்.

இவ்வாறு கங்குலி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

37 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்