''வெறும் வாய்ச்சொல் வீரர்கள்'' - இங்கிலாந்து அணியை கடுமையாக சாடிய மைக்கேல் வான்

By ஆர்.முத்துக்குமார்

நடப்பு ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. ஆடுகலத்தின் தன்மையைப் பார்க்காமல், ஆரம்பகட்ட மேகமூட்ட வானிலையைப் பார்த்து பென் ஸ்டோக்ஸ், ஆஸ்திரேலியாவை பேட் செய்ய முதலில் அழைத்து இப்போது வெற்றி வாய்ப்பை இழக்கும் அபாயத்தில் இருப்பதோடு, இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வென்று விட்டால் ஆஷஸ் தொடரே கையை விட்டுப் போகும் பேராபத்தில் அணியை தள்ளி இருக்கிறார்.

2001-ம் ஆண்டிற்குப் பிறகு ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா இங்கு வெல்லும் வாய்ப்பை எதிர்நோக்குகிறார் கேப்டன் பாட் கம்மின்ஸ். நேற்று இங்கிலாந்து ஃபிளாட் பிட்சில் ஏகப்பட்ட தவறுகளை இழைத்தது. முதலாவது டாஸ் வென்று பேட்டிங் செய்யாமல் இருந்தது. இரண்டாவது வேகமாக வீசக்கூடிய பவுலர்கள் இல்லாமல் வயதான ஆண்டர்சன், பிராட் கூட்டணியை நம்பிக் களமிறங்கியது. மூன்றாவது ஆடுகலத்தை பிளாட்டாக பவுன்ஸ் இல்லாமல் போட்டது. நான்காவது ஏகப்பட்ட நோபால்களை வீசியதோடு, கேட்ச்களையும் தவற விட்டு, மைக்கேல் வான் கூறுவது போல் ‘மெத்தனப் போக்கை’ கடைப்பிடித்தது.

முதல் விக்கெட்டுக்காக வார்னர், கவாஜா 73 ரன்களைச் சேர்க்க 3-வது விக்கெட்டுக்காக ஸ்மித் (85 நாட் அவுட்), லபுஷேன் (47 அவுட்) சேர்ந்து 102 ரன்களையும், பிறகு 4-வது விக்கெட்டுக்காக ட்ராவிஸ் ஹெட் 73 பந்துகளில் 77 ரன்களையும் விளாசித்தள்ள, இவரும் ஸ்மித்தும் சேர்ந்து 20 ஓவர்களில் 118 ரன்களைச் சேர்த்து இங்கிலாந்தின் பலவீனங்களை அம்பலப்படுத்தினர். இங்கிலாந்து 12 நோபால்களை வீசியது, 2 கேட்ச்களை கோட்டை விட்டது.

இந்நிலையில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் இங்கிலாந்து அணியை கடுமையாக விமர்சித்துள்ளார்: “இங்கிலாந்தைப் பற்றி கவலை அடைகிறேன். ரொம்பவும் மெத்தனமாக ஆடுகிறார்கள், மெத்தனப் போக்கைக் கடைபிடிக்கிறார்கள். எட்ஜ்பாஸ்டனில் அவர்கள் சப்தத்தை இழந்தனர். ஆனால், லார்ட்ஸில் உண்மையில் மீட்டெழுச்சியுடன் ஆட வேண்டியவர்கள் மெத்தனமாக ஆடுகின்றனர். இதனால் இந்த டெஸ்ட்டை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் தோற்ற பிறகு இங்கிலாந்து தரப்பிலிருந்து சில பாசிட்டிவ் ஆன பேச்சுக்கள் எழுந்தன. அதாவது எந்த அளவுக்கு பாசிட்டிவ் ஆக இருந்ததென்றால் ஏதோ இங்கிலாந்து வெற்றி பெற்றது போன்ற ஒரு அசட்டு பாசிட்டிவிசம். ஆனால் உண்மையில் தோற்றோம். அது புரிகிறதா இல்லையா?

பேச்சுக்கு பதில் பேச்சு பேசுவோம் என்றால் ஆஸ்திரேலியாவின் நடவடிக்கைகளுக்கு பதில் நடவடிக்கைகளும் தேவையல்லவா? இந்தத் தொடர் ஏதோ மற்ற டெஸ்ட் தொடர்களைப் போலத்தான் என்று இங்கிலாந்து ஆடுவது போல் தெரிகிறது. ஆஷஸ் தொடர் மற்ற தொடர்களைப் போல் அல்ல. மற்ற அணிகளுக்கு எதிராக ஆடுவது போல் மெத்தனமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட முடியாது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உறுதியாக ஆடுவதுதான் நம் அணியைப் பற்றி பறைசாற்றும்.

பவுலிங்கும் சரியில்லை, பீல்டிங்கும் சரியில்லை. நோ-பால்கள் வீசுகின்றனர். டேவிட் வார்னர் ஆட்டமிழந்த பிறகு ஸ்டீவ் ஸ்மித்திற்கு அடிப்பதற்கு வாகாக 5 ஆஃப் வாலி பந்துகள் போட்டுக் கொடுக்கப்பட்டன. ட்ராவிஸ் ஹெட்டிற்கு 2 பரிசுகள் கிடைத்தது. டெஸ்ட் மேட்சுக்கே உரிய கூர்மைத்தனத்துடன் இங்கிலாந்து ஆடவில்லை” என்று கடுமையாகச் சாடியுள்ளார் மைக்கேல் வான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE