ஆஷஸ் | லார்ட்ஸ் ஆடுகளத்துக்குள் புகுந்த ‘ஜஸ்ட் ஸ்டாப் ஆயில்’ ஆர்பாட்டக்காரர்கள்: யார் இவர்கள்?

By ஆர்.முத்துக்குமார்

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் நேற்று ஆஸ்திரேலியா பேட்டிங் செய்ய தொடங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம் களத்தில் லேசான களேபரம் ஏற்பட்டது. சுற்றுச்சூழல் மாசுபாடு கேடுகளை எதிர்க்கும் ‘Just Stop Oil’ என்ற சூழலிய ஆர்வலர்கள் லார்ட்ஸ் மைதானத்தின் ஆடுகளத்திற்குள் ஊடுருவ முயன்றார்கள். ஆட்டம் தொடங்கிய போது ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் ஆர்ப்பாட்டக்காரர்கள் (Just Stop Oil protesters) டி-ஷர்ட் அணிந்து நுழைந்து பிட்சில் ஆரஞ்சு நிற பவுடர் பெயிண்டை தெளிக்க முயன்றார்கள். ஆனால், அவர்களில் ஒருவரை ஜானி பேர்ஸ்டோ அகற்ற, இன்னொருவரை போலீஸார் பிடித்துச் சென்றனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஆட்டத்தில் சிறிது நேரம் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் என்ற சூழலியல் பாதுகாப்பு அமைப்பினர், இதற்கு முன்னரும் பல உயர்மட்ட விளையாட்டுப் போட்டிகளில் அதிரடியாக உள்ளே புகுந்து இடையூறு செய்துள்ளனர். பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகளிலும் இவர்கள் ஊடுருவி சுற்றுச்சூழல் நாசத்தை எதிர்த்து தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளனர். ரக்பி யூனியன் இறுதிப் போட்டி, உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் இவர்கள் ஊடுருவியுள்ளனர்.

இது குறித்து ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “கிரிக்கெட் எங்களது தேசிய பாரம்பரியத்தின் முக்கிய அங்கமாகும். மற்ற கிரிக்கெட் உலகங்களில் மனிதர்கள் வாழ முடியாமல் போகும் அளவுக்கு சுற்றுச்சூழல் நாசம் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது நாம் எப்படி இங்கிலாந்து-ஆஸ்திரேலியா போட்டியை ரசிக்க முடியும்? நாம் சாப்பிடும் உணவு, நாம் நேசிக்கும் விளையாட்டு, நாம் கொண்டாடும் கலாச்சாரங்கள் பெரிய நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் நிலையில் நாம் நம் கவனத்தை சிதறடிக்கும் வேலைகளில் ஈடுபடக்கூடாது.

இந்த சட்டவிரோத கிரிமினல் அரசின் செயல்பாடுகளை எதிர்க்க வேண்டியது அவசியம். தெருக்களில் இறங்கி போராட வேண்டிய தேவையை உணர வேண்டும். நம் குழந்தைகளே நாளை இதற்காக என்ன செய்தீர்கள் என்று கேட்கும் போது நாம் நல்ல விடைகளை அவர்களுக்கு பகர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

லார்ட்ஸ் மைதானத்தின் ஸ்பான்சர் ஜே.பி.மோர்கன் என்ற மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தை ‘உலகின் மோசமான புதைபடிவ வங்கி’ என்று இந்த அமைப்பினர் கடுமையாக எதிர்க்கின்றனர். அதாவது ‘உலக சுற்றுச்சூழல் சீரழிவுகளில் குளிர் காயும் நிறுவனம் ஜே.பி.மோர்கன்’ என்று இந்த அமைப்பினர் சாடி வருகின்றனர்.

யார் இவர்கள்? பெட்ரோலியப் பொருட்கள், கச்சா எண்ணெய் போன்ற புதைபடிவ எரிபொருள் எடுப்பு நடவடிக்கைகளினால் உலகின் பசுமை இல்ல வாயுக்கள் அதிகமாக விண்வெளியில் படர்ந்து குளோபல் வார்மிங் அதிகரித்து உலகின் பல ஏழை நாடுகள் அழியும் அபாயத்தில் இருப்பதாகக் கூறும் இவர்கள், புதைபடிவ எரிபொருள் எடுப்பதற்கு பிரிட்டன் அரசு உரிமங்களை வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களிலும், கிளர்ச்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

பிப்ரவரி 2022-ம் ஆண்டு இந்த அமைப்பு பிரிட்டனில் உருவானது. ஆனால், இவர்கள் அமைதி வழி ஆர்ப்பாட்டக்காரர்கள் அல்ல. சாலை மறியலில் ஈடுபடுவது, சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது போன்ற வன்முறைகளிலும் ஈடுபடுகின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் இந்த அமைப்பினர் மீது உண்டு. இந்த அமைப்பினரோ தாங்கள் அகிம்சை வழியில் போராடுவதாகத்தான் கூறுகின்றனர். அகிம்சை வழி நேரடி செயல்பாடு தான் எங்கள் கொள்கை என்கின்றனர்.

ஆனால் இந்த அமைப்பின் தலைவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். பல நேரங்களில் போக்குவரத்தையும் ஸ்தம்பிக்கச் செய்யும் இவர்களது ஆர்ப்பாட்டங்களினால் பிரிட்டன் அரசு இவர்களை அடக்க போலீஸாருக்கு கூடுதல் அதிகாரங்களை அளித்துள்ளது. இந்த அமைப்பின் ஆதரவாளர்கள் 2022 ஏப்ரல் முதல் இதுவரை சுமார் 2100 முறை கைது செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 138 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு சிறைவாசம் சென்றுள்ளனர்.

2025-க்குள் நூற்றுக்கும் மேற்பட்ட புதைபடிவ எரிபொருள் உரிமங்களை வழங்க பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது. பிரிட்டன் சட்டங்களின் படி சாலை மறியல் போராட்டங்களெல்லாம் சட்டரீதியாக அங்கீகரிக்கப்படாதவை. சாலையில் மோட்டார் வாகனங்களில் செல்பவர்களை வலுக்கட்டாயமாக இடையூறு செய்வதும் இதனால் கடும் வாக்குவாதங்களும் தகராறும் எழுவதும் லண்டனில் அன்றாடக் காட்சியாகி வருவதாக பொதுமக்கள் தரப்பில் அதிருப்தி வெளியாகி வருகின்றது.

இந்த ‘ஜஸ்ட் ஸ்டாப் ஆயில்’ ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பெரும்பாலும் நிதி ஆதாரம் அன்பளிப்பாக வருவதாகக் கூறப்பட்டாலும், அமெரிக்காவைச் சேர்ந்த கிளைமேட் எமர்ஜென்சி நிதியம் பெரும் தொகையை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதில் நகைமுரண் என்னவெனில் அமெரிக்காவின் ‘கிளைமேட் எமர்ஜென்சி நிதியம்’ அமைப்பிற்கு நிதியளிப்பவர் அமெரிக்க பரோபகாரியான அய்லீன் கெட்டி என்பவர் என்று கூறப்படுகிறது. இந்த அய்லீன் கெட்டியின் தாத்தா பெரிய பெட்ரோலியத் தொழிலதிபர் ஜே.பால் கெட்டி என்பவர் தான்.

இந்தப் பின்னணியில்தான் ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் அமைப்பினர் நேற்று ஆஷஸ் டெஸ்ட் தொடர் லார்ட்ஸ் மைதானத்தில் அதிரடியாக நுழைந்து, கவன ஈர்ப்பு பெற்றுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE