Dhoni Effect | 3 மணி நேரத்தில் 30 லட்சம் டவுன்லோடுகளை கடந்த கேண்டி க்ரஷ்!

By செய்திப்பிரிவு

சென்னை: இண்டிகோ விமானத்தில் பயணித்தபடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ‘கேண்டி க்ரஷ்’ விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவலாக நெட்டிசன்களின் கவனம் பெற்றது. இந்தச் சூழலில் வெறும் 3 மணி நேரங்களில் சுமார் 36 லட்சத்துக்கும் மேற்பட்ட டவுன்லோடுகளை கேன்டி க்ரஷ் கேம் கடந்துள்ளது.

அண்மையில் இண்டிகோ விமானத்தில் தோனி பயணித்துள்ளார். அப்போது, அந்த விமானத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றி வரும் ஒருவர், தோனிக்கு அன்புடன் ஒரு தட்டு நிறைய சாக்லேட் மற்றும் மடல் ஒன்றையும் வைத்து கொடுத்துள்ளார். அந்த மடலையும், சாக்லேட் ஒன்றையும் எடுத்துக் கொண்ட தோனி, சில நொடிகள் அந்தப் பெண்ணுடன் பேசுகிறார். அப்போது அவரது கையில் இருந்த டேப்லெட் சாதனத்தில் அவர் கேன்டி க்ரஷ் மொபைல் கேம் விளையாடி வந்தது தெரிந்தது.

அது குறித்த அந்தப் பணிப்பெண் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். “நிச்சயம் என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. நான் அவரை இப்படி சந்திப்பேன் என எதிர்பார்க்கவில்லை. அவர் மாமனிதர் என்பதில் துளியும் சந்தேகமில்லை. மிகவும் அன்புடன் பேசினார்” என அந்தப் பதிவில் அவர் தெரிவித்திருந்தார். அதோடு வீடியோவையும் பகிர்ந்திருந்தார். அது வைரலானது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சிலர் அவர் பயணித்தது எக்கானமி வகுப்பு என்றும், அவர் ராஞ்சி தான் செல்கிறார் என்றும் தெரிவித்திருந்தனர்.

இந்தச் சூழலில் வெறும் 3 மணி நேரத்தில் கேன்டி க்ரஷ் சாகா கேம் சுமார் 36 லட்சத்துக்கும் மேற்பட்ட டவுன்லோடை கடந்துள்ளது. அதோடு கேன்டி க்ரஷ் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. பலரும் அந்த கேம் குறித்த தங்கள் நினைவுகளை பதிவுகளாக பகிர்ந்திருந்தனர்.

வீடியோ கேம் பிரியர் தோனி: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, வீடியோ கேம் பிரியர் என தெரிவித்துள்ளார் இந்திய வீரர் இஷாந்த் சர்மா. அவருடன் கிரிக்கெட் விளையாட செல்லும் போது பிளே ஸ்டேஷனை கையோடு கொண்டு செல்வோம் என தெரிவித்துள்ளார். அவருக்கு ஆன்லைன் அல்லது வீடியோ கேம் விளையாட மிகவும் பிடிக்கும். குறிப்பாக கால் ஆஃப் ட்யூட்டி, பப்ஜி போன்ற கேம்களை விரும்பி விளையாடுவார் என இஷாந்த் தெரிவித்துள்ளார்.

அண்மையில் முடிந்த ஐபிஎல் சீசனில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஐபிஎல் சீசன் முடிந்ததும் மூட்டுப் பகுதியில் தோனிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் தலைமையில் இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சுமார் 18 மாதங்கள் அவர் தலைமையிலான அணி முதலிடத்தில் இருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE