சமூக வலைதளங்களில் பெரிய ஆதரவு இல்லாததால் புஜாராவை நீக்க முடிந்ததோ? - கவாஸ்கர் விளாசல்

By ஆர்.முத்துக்குமார்

இந்திய அணி தங்களது பேட்டிங் சொதப்பல்களுக்கும், தோல்விகளுக்கும் புஜாராவை ‘பலிகடா’ ஆக்கியிருப்பதாக நாம் அன்று கூறியது போலவே லெஜண்ட் சுனில் கவாஸ்கரும் கருத்து தெரிவித்துள்ளார். ‘நம்முடைய பேட்டிங் தோல்விகளுக்கு புஜாராதான் பலிகடாவா?’ என்று சுனில் கவாஸ்கர் ஆங்கில ஊடகம் ஒன்றின் பேட்டியில் கடுமையாக கண்டித்துள்ளார்.

புஜாரா பலி கடா ஆக்கப்பட்டது ஏன் என்பது பற்றி முற்றிலும் வேறு கோணத்தில் அன்று நாம் அலசியிருந்தோம். கவாஸ்கர் நேற்று அளித்த பேட்டியில் நாம் கூறும் கோணத்தை வெளிப்படையாகச் சொல்லாமல் சூசகமாக தெரிவித்திருந்தார்.

கவாஸ்கர் கூறியது: “புஜாராவை ஏன் நீக்கினார்கள். நம் பேட்டிங் தோல்விகளுக்கு ஒரு பலிகடா தேவை என்பதற்காகவா? இந்திய கிரிக்கெட்டின் விசுவாசமான ஊழியர் புஜாரா. பாவம் புஜாராவுக்காக சமூக ஊடகங்களில் சப்தம் போடுபவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்ன? இவரை அணியிலிருந்து நீக்கினால் சமூக ஊடகங்களில் தொண்டை வறள எதிர்த்து சத்தம் எழுப்ப லட்சக்கணக்கான ரசிகர்கள் இல்லையே பாவம்.

இது ஒன்றுதான் என் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. ஏன் புஜாராவை அணியிலிருந்து நீக்கிய அளவுகோல்கள் மற்ற தோல்வியடைந்த, தோல்வியடைந்து கொண்டிருக்கும் வீரர்களுக்கு எதிராக ஏவி விடப்படுவதில்லை. எனக்குத் தெரியவில்லை. இப்போதெல்லாம் தேர்வுக் குழுவினர் ஊடகவியலாளர்களைச் சந்திப்பதில்லை. ஏனெனில் அங்குதான் இத்தகைய கேள்விகளைக் கேட்க முடியும்” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

2021- 23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் 32 இன்னிங்ஸ்களில் 928 ரன்கள் எடுத்து இந்தியாவின் அதிகபட்ச ரன்கள் எடுத்ததில் 2வது வீரராக உள்ளார் புஜாரா. ஒரு சதம் மற்றும் 6 அரைசதங்கள் எடுத்துள்ளார். இனி புஜாராவின் வாழ்க்கை அவ்வளவுதான், ரஹானே போல் இவரால் திரும்பி வர முடியாது, அது கடினமே. ஏனெனில் இப்போது ரஹானே வந்து விட்டார், காயமடைந்த கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஸ்ரேயஸ் அய்யர் வந்து விட்டால் புஜாராவுக்கு வாய்ப்பில்லை என்பதே இன்றைய நிலவரம்.

ஆனால், கவாஸ்கர் கூறுவது என்னவெனில் புஜாரா மீண்டும் வர முடியும் என்கிறார், அதாவது, “புஜாரா ஒருவர்தான் அதிக சிகப்புப் பந்து கிரிக்கெட்டில் ஆடுகிறார், மேலும் இப்போதெல்லாம் 39-40 வயது வரை ஆடுகின்றனர். ஏன் ஆடக்கூடாது, உடல் தகுதியைப் பராமரித்து ரன்கள் அடிக்க முடியும் பட்சத்திலும் விக்கெட்டுகள் வீழ்த்த முடியும் பட்சத்திலும் ஆடினால் ஒன்றும் தவறில்லை. ரஹானே தவிரஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் யாரும் ஆடவில்லை. இப்படியிருக்கும் போது புஜாராவை மட்டும் பட்சபாதமாக ஓரங்கட்டப்படலாமா? தேர்வுக்குழுவினர் இதற்கு பதில் அளித்துதான் ஆகவேண்டும்.

சர்பராஸ் கானை ஏன் எடுக்கவில்லை. ஐபிஎல்-ல் நன்றாக ஆடினால் உடனே டெஸ்ட்டில் தேர்வு செய்கிறார்கள். இதுதான் இன்றைய நிலைமை. தேர்வுமுறையை கவனியுங்கள் 2 டெஸ்ட் போட்டிகளுக்கு 4 தொடக்க வீரர்களைத் தேர்வு செய்கின்றனர். இப்போது என்ன வெஸ்ட் இண்டீஸ் பழைய அணி போல் கடுமையான வேகப்பந்து வீச்சா இப்போது இருக்கிறது 6 தொடக்க வீரர்களை வைத்துக்கொள்ள?

சர்பராஸ் கான் கடந்த 3 ரஞ்சி சீசன்களிலும் 100 என்ற சராசரியில் ரன்களைக் குவித்து வருகிறார். அவரை டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்ய இன்னும் என்னதான் அவர் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள்? தேர்வு செய்யவில்லையா, ரஞ்சி டிராபி ஆடாதீர்கள், அதில் ஒரு பயனும் இல்லை என்று கூறிவிடுங்கள். ஐபிஎல் ஆடினால் போதும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் அவர் உயர்ந்தவர் என்று கூறிவிடுங்கள், வெளிப்படையாக கூறிவிடுங்கள்” என்று கவாஸ்கர் விளாசியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 mins ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்