மறக்க முடியாத 1983 உலகக் கோப்பை வெற்றி: சாதித்த ஹரியாணா ஹரிக்கேன்

By செய்திப்பிரிவு

மும்பை: 1983-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2 முறை சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. இந்த சாதனை படைக்கப்பட்டு நேற்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அந்தக் காலக்கட்டத்தில் ஹாக்கி விளையாட்டைத் தவிர்த்து எந்த விளையாட்டிலும் இந்தியா வெற்றிபெற முடியாது என்றே பலரும் நினைத்திருந்தனர். ஆனால் 1983-ல் இந்தியா, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வெல்லும் என்று யாருமே நினைத்திருக்க மாட்டார்கள்.

கபில்தேவ் தலைமையில் இடம்பெற்றிருந்த வீரர்களுக்கே இந்த எண்ணம் இல்லை என்றபோது, நாட்டு மக்களின் எண்ணம் பற்றி சொல்லவே தேவையில்லை. ஆனால் `கபில்ஸ் டெவில்ஸ்` என்று செல்லமாக அழைக்கப்பட்ட கபில் தேவ் தலைமையிலான இந்திய அணியினர், கிரிக்கெட்டிலும் இந்தியாவால் சாதிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டினர். ஒற்றை ஆளாக அணியை வழிநடத்தி நினைக்க முடியாததை நடத்திக் காட்டினார் ஹரியாணா ஹரிக்கேன் (ஹரியாணா புயல்) என்று அழைக்கப்படும் கபில் தேவ்.

கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையைக் கைப்பற்றி நேற்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதை உலகம் முழுவதுமுள்ள இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த சாதனை குறித்து கபில் தேவ் தலைமையில் இடம்பெற்றிருந்த அப்போதைய இந்திய அணி வீரர்கள் கூறுவது என்ன....

யஷ்பால் சர்மா: கோப்பையை வென்று 40 ஆண்டுகளாகி விட்டது. 83-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தை மறக்கவே முடியாது. விவியன் ரிச்சர்ட்ஸின் கேட்ச்சை கேப்டன் கபில் தேவ் நீண்ட தூரம் ஓடிச் சென்றுபிடித்தது என் கண் முன்னே இன்றும் நிற்கிறது.

சுனில் வால்சன்: இறுதிப் போட்டியில் திலீப் வெங்சர்க்கார், ரவி சாஸ்திரி போன்றவர்கள் அணியில் இடம்பெறவில்லை. இதில் எனக்கு வருத்தம் இருந்தது. இருந்தபோதிலும் கோப்பையை வென்று சாதித்தோம். அந்த சாதனை நாளில் எந்தவொரு நினைவுப் பொருளையும் அப்போது என்னால் சேகரிக்க முடியவில்லை.

சந்தீப் பாட்டீல்: 1983 உலகக் கோப்பை போட்டியானது பல மாற்றங்களைக் கொண்டு வந்தது. இதை ஒரு சகாப்தத்தின் தொடக்கம் என்று சொல்லலாம்.

ரவி சாஸ்திரி: கிரிக்கெட்டில் இன்றைய இளைய தலைமுறையினர் முன்னேறி வருகின்றனர் என்றால், அதற்கு 1983 உலகக் கோப்பை போட்டிக்கு நன்றி சொல்ல வேண்டும்.

மொஹிந்தர் அமர்நாத்: 1983-க்கு முந்தைய உலகக்கோப்பை போட்டிகளில் நாங்கள் பங்கேற்க மட்டுமே செய்தோம். ஆனால் 1983 வெற்றிக்குப் பிறகு எங்கள் மீதான பிம்பம் மாறியது.

கீர்த்தி ஆசாத்: 83 வெற்றிக்குப் பிறகு 1987 உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பை இந்தியாபெற்றது. சிறந்த கிரிக்கெட்டை இந்தியா விளையாடும் என்று உலகம் ஏற்றுக் கொண்டது. மேலும், உலகக் கோப்பை போட்டியை இந்தியாவால் மிகச்சிறப்பாக நடத்த முடியும் என்பதையும் ஒப்புக்கொண்டது.

சையத் கிர்மானி: 1983 உலகக்கோப்பையின்போது, உலக சாம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் அணியை தொடக்க ஆட்டத்திலேயே வீழ்த்தினோம். இதுவே போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது.

சுனில் கவாஸ்கர்: 1983-ல் அடைந்த வெற்றியின் தாக்கம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகிகளிடம் இருக்கிறது. அதனால்தான்இந்தியாவால் உலகக் கோப்பையை மீண்டும் வெல்ல முடியும் என்று இப்போதும் கூறுகின்றனர்.

ரோஜர் பின்னி: 83 உலகக் கோப்பையின்போது நாள் முழுவதும் கிரிக்கெட்டை பற்றி விவாதித்தது இல்லை. அவ்வப்போது அணி வீரர்களின் கூட்டத்தை மட்டும் கபில் தேவ் நடத்துவார். அப்போது கூட அன்றைய போட்டி குறித்து அவ்வளவாக விவாதித்தது இல்லை.

பல்வீந்தர் சாந்து: உலகக் கோப்பையை வென்று 40 ஆண்டுகளாகிவிட்டன. எங்களது சாதனை வரலாற்றுச் சாதனைதான். அந்த நினைவு எப்போதும் இருக்கும். எங்கள் கிரிக்கெட் பயணத்தின் சிறந்த தருணமாக அது எப்போதும் இருக்கும்.

மதன் லால்: எங்கள் வெற்றிக்குப் பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் அணியை, இந்தியாவால் வெல்ல முடியும் என்றால், நம்மாலும் வெல்ல முடியும் என்று சிறிய அணிகள் கூட நினைக்கத் தொடங்கிவிட்டன.

கே.ஸ்ரீகாந்த்: எங்களின் உத்வேகமான கேப்டன் கபில்தேவ் தலைமையில் நாங்கள் கொண்டிருந்த அளப்பரிய தன்னம்பிக்கையால்தான் இந்த வெற்றி சாத்தியமானது.

திலீப் வெங்சர்க்கார்: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். போட்டிக்கு முன்னதாக நான் காயமடைந்து இடம்பெறாமல் போனதை மறக்க முடியாது.

கபில் தேவ்: 83 வெற்றிக்குப் பிறகு பம்பாய் விமான நிலையத்திலிருந்து வான்கடே ஸ்டேடியம் வரை நடைபெற்ற வெற்றி ஊர்வலத்தை மறக்கவே முடியாது. நாட்டின் குடியரசுத் தலைவரிடமிருந்தும், பிரதமரிடமிருந்தும் கிடைத்த பாராட்டை எப்படி ஒருவரால் மறக்க முடியும்?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்