அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஸ்பெஷல்: 1983 உலகக் கோப்பை வெற்றி குறித்து கபில்தேவ்

By செய்திப்பிரிவு

மும்பை: 1983-ல் ஜூன் 25-ம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த சரித்திர சாதனை படைத்து சரியாக 40 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அந்த வெற்றி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் அப்போது இந்திய அணியை வழிநடத்திய கேப்டனான கபில்தேவ்.

“உலகக் கோப்பை தொடரில் நாங்கள் பதிவு செய்த ஒவ்வொரு வெற்றியும் மகத்தானது. ஆனால், எனது மனதுக்கு மிகவும் நெருக்கமான போட்டி என்றால் அது இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டி தான். ஏனெனில், அவர்கள் எங்களுக்கு எதிராக எளிதில் வெற்றி பெறுவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அமர்நாத் மற்றும் ஆசாத் வீசிய 24 ஓவர்கள் எங்களுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அந்த தொடர் எங்கள் ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத வகையில் அமைந்தது” என கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

175 நாட் அவுட்: “அணியின் கேப்டன் என்ற முறையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியை அணுகினேன். அணியின் நலன் தான் எனது பணி. அந்தப் போட்டியில் சவால் அதிகம் இருந்தது. அது மாதிரியான சூழலை அதற்கு முன்னதாக நான் சந்தித்தது இல்லை.

எனது எண்ணம் எல்லாம் அணி 180 - 200 ரன்களை எட்டினால் போதும் என்று தான் இருந்தது. அந்தப் போட்டியின் தொடக்கத்தை நான் எனது சிந்தனைக்கு கொண்டு செல்லவில்லை. களத்தில் கடைசி வரை விளையாட வேண்டும் என நான்-ஸ்ட்ரைக்கரிடம் தெரிவித்தேன்.

அதோடு அந்தப் போட்டியில் எனது இயல்பான ஆட்டதிற்கு எதிராக நான் விளையாடி இருந்தேன். ‘களத்தில் இரு’ என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். வெயிட்டிங் கேம் ஆடினேன். கடைசி 7 ஓவர்களில் பார்த்துக் கொள்ளலாம் என ஆடிய இன்னிங்ஸ். நான் அடித்த சில ஷாட்கள் குறித்து அணியின் சக வீரர்கள் பேசுவார்கள். ஆனால், எனது நினைவில் இருப்பது ஆஃப் ஸ்பின்னருக்கு எதிராக மிட் விக்கெட் திசையில் அடித்த ஷாட் தான். அந்தப் பந்து மரங்களுக்கு மத்தியில் பறந்து, காணாமல் போனது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 9 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது. அப்போது களத்திக்கு சென்ற கபில்தேவ், 138 பந்துகளில் 175 ரன்களை குவித்தார். 60 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்தது. அதோடு இந்தப் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE