புஜாராவை நீக்கி பலிகடா ஆக்கிவிட்டால் எல்லாம் சரியாகி விடுமா?

By ஆர்.முத்துக்குமார்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் தோல்விக்கான உண்மையான காரணங்களை ஆராயாமல் உடனேயே மாற்றம் செய்து விட்டோம் என்று கண் துடைப்பு செய்வது இந்திய அணி நிர்வாகத்திற்கு புதிதல்ல. இம்முறை இந்த கண் துடைப்பின் பலிகடாவாகி இருக்கிறார் புஜாரா. ஷமியும் இன்னொரு பலிகடா. ஆனால், இதைப்பற்றி பின்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம். இப்போதைக்கு அணியிலிருந்து நீக்கப்படத் தகுதி பெற்ற ஒரே பேட்டர் புஜாரா மட்டும்தானா என்பதை பார்ப்போம்.

புஜாரா ஆடிய கடைசி 17 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் அவர் அடித்த ஸ்கோர் விவரம்: 53, 43, 9, 13, 66, 90, 102 நாட் அவுட், 24, 6, 7, 0, 31 நாட் அவுட், 1, 59, 42, 14, 27. இதன் கூட்டுத்ததொகை 587 ரன்கள் அதாவது 17 இன்னிங்ஸ்களில். ட்ராப் செய்யப்பட வேண்டிய இன்னொரு வீரர் விராட் கோலி இவரது கடைசி 17 டெஸ்ட் இன்னிங்ஸ்களின் ஸ்கோர்களைப் பார்ப்போம்: 45, 23, 13, 11,20, 1, 19, 24, 1, 12, 44, 20, 22, 13, 186, 14, 49. மொத்த ரன்கள் எண்ணிக்கை 517 ரன்கள். இன்னொரு சூப்பர் ஸ்டாராக கருதப்படும் ரோஹித் சர்மாவின் கடைசி 17 டெஸ்ட் இன்னிங்ஸ்களையும் எடுத்துக் கொள்வோம்: 83, 21, 19, 59, 11, 127, 29, 15, 46, 120, 32, 31, 12, 12, 35, 15, 43 - மொத்தம் 710 ரன்கள்.

இதில் விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அகமதாபாத்தில் எடுத்த 186 ரன்கள் மிக மந்தமான அறுவையான ஒரு இன்னிங்ஸ். 364 பந்துகளில் 186 ரன்களை விராட் கோலி கட்டைப் போட்டு எடுக்க ஆட்டம் ட்ராவில் முடிந்தது. இது ஒரு பெரிய இன்னிங்ஸா? மேலும், இந்த 186 ரன்களை லிஸ்ட்டிலிருந்து எடுத்து விட்டால் அவர் 16 இன்னிங்ஸ்களில் எடுத்தது வெறும் 331 ரன்கள் மட்டுமே. அதுவும் இந்த 186 ரன்களுக்கு முன்னால் சதம் அடித்த நினைவு கோலிக்கே இருக்காது. இதற்கு முன்னால் உள்நாட்டில் வங்கதேசத்தின் சொத்தை பவுலிங்குக்கு எதிராக 2019-ல் ஈடன் கார்டன்ஸில் கோலி 136 எடுத்ததுதான் 186 ரன்களுக்கு முந்தைய சதம்.

ஒரு சூப்பர் ஸ்டார் வீரர் 4 ஆண்டுகள் கழித்து ஒரு சதம் எடுக்கிறார். அவரை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தூக்கும் ஊடகங்கள், ரசிக மணிகள். சதத்தை விடுவோம் அரைசதத்தை கடைசியாக கோலி எப்போது எடுத்தார் தெரியுமா? 2022-ல். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ராகுல் திராவிட் போல் செம மட்டை போட்டு அறுவையாக ஒரு 79 ரன்களை எடுத்தார். இதற்கு முந்தைய அரைசதம் 2021-ல் ஓவலில் எடுத்தது, அப்போது 50. இந்த 50க்கும் கடைசி 79-க்கும் இடையில் 44, 0, 36, 35, 18 இவரது ஸ்கோர், இந்த 79-க்கும் 186-க்கும் இடையே கோலியின் ஸ்கோரைத்தான் நாம் மேலே பட்டியலிட்டுள்ளோம். கடைசியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 14 மற்றும் 49 அதுவும் அவுட் ஆனது மகா அராஜகமான ஷாட்டில்.

மாறாக புஜாரா மீது கடும் அழுத்தம் செலுத்தப்பட்டு வருகின்றது. அவர் பாவம் அப்பர் கட் ஆடப்போய் அவுட் ஆகிறார் என்றால் நிச்சயமாக அந்த ஷாட் அவரது தெரிவு கிடையாது. அவரது விருப்பமான ஷாட் கிடையாது. செம்மையாக பிளேடு போடும் கோலி, பங்களிப்பு இன்னிங்ஸைக் கூட ஆடுவதில்லை. நம் கேள்வியெல்லாம், கோலிக்கு ஒரு சட்டம் புஜாராவுக்கு ஒரு சட்டமா? என்பதே. 2018-ல் ஆஸ்திரேலியாவில் போய் கோலி முதன் முதலில் வெற்றிக் கொடி நாட்டிய தொடரில் புஜாராதான் மூன்று சதங்களை அடித்தார். இதையும் நாம் மறக்க முடியாது.

ரோஹித் சர்மா ரன்கள் அளவில் இவர்கள் இருவரையும் விட அதிகமாக எடுத்திருக்கிறார். 2 சதங்கள் அடித்திருக்கிறார் என்றாலும் 17 இன்னிங்ஸ்களில் 83, 59, 127, 120 தவிர மற்றவை எல்லாம் மிகக்குறைந்த ஸ்கோர். கோலியின் 186 ரன்களை விடுத்து மற்ற ஸ்கோர்கள் மிக மிக குறைந்த ஸ்கோர்களே. இதை ஒப்பிடும் போது வெறும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடும் புஜாராவை எடுத்துக் கொண்டால் குறைந்த பட்சமான ஒரு சீரான பங்களிப்பு இருக்கிறது என்றே கூற வேண்டும்.

மிக அதிகமாக குறைந்த ஸ்கோர்களில் அவுட் ஆவதில் ரோஹித் சர்மாவுக்கும் கோலிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது, இத்தனைக்கும் இவர்கள் அனைத்து வடிவங்களிலும் ஆடுகிறார்கள். இவர்கள் நினைத்தால் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். விலகலாம், நினைத்தால் எந்தத் தொடரில் வேண்டுமானாலும் வந்து ஆடலாம். இத்தகைய சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டு சீரான பங்களிப்பையும் செய்வதில்லை. இந்தச் சலுகைகள் ரஹானேவுக்கோ, புஜாராவுக்கோ, அஸ்வினிக்கோ, பிறருக்கோ உள்ளதா என்பதே நம் கேள்வி

நாம் கேட்பதெல்லாம் புஜாராவை ஏன் நீக்கினார்கள் என்பதை கண்டிப்பதல்ல. என்ன அளவுகோலில் புஜாரா நீக்கப்பட்டுள்ளாரோ அதே அளவுகோலை ரோஹித் சர்மா, விராட் கோலிக்கும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுதான்.

ஆனால் இந்திய அணித்தேர்வு வீரர்களின் உண்மையான ‘பெர்பார்மன்ஸ்’ அடிப்படையில் அல்ல. அவர்களது வர்த்தக ஆளுமை மற்றும் ‘நெட்வொர்த்’ எனப்படும் வர்த்தக விளம்பர பாத்யதைகளையும் செல்வாக்குகளையும் அடிப்படையாகக் கொண்டது என்பதே இன்றைய நிதர்சனம். விராட் கோலியின் நிகர மதிப்பு ரூ.1050 கோடி என்கிறது ஒரு சில புள்ளி விவரங்கள். உலக கிரிக்கெட் வீரர்களில் பணக்கார வீரர்களின் பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறார் விராட் கோலி. ரோஹித் சர்மாவின் நெட்வொர்த் 225 கோடிகள் என்கிறது புள்ளி விவரங்கள். இன்னும் சச்சின் டெண்டுல்கர்தான் விராட் கோலிக்கு முன்னதாக உள்ளார்.

2021-ம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி சச்சின் டெண்டுல்கரின் நெட் வொர்த் 1,110 கோடிகள் என்கிறது புள்ளி விவரங்கள். விராட் கோலி சச்சின் டெண்டுல்கரை உடைத்து விடுவார் என்பதில் இரட்டைப் பொருள் உள்ளது. சச்சினின் கிரிக்கெட் ரெக்கார்டை உடைக்கிறாரோ இல்லையோ சச்சின் டெண்டுல்கரின் நெட்வொர்த்தைக் கடந்து விடுவார் விராட் கோலி. சச்சின், விராட் கோலிக்குப் பிறகு எம்.எஸ்.தோனி ரூ.785 கோடி நெட் வொர்த் வீரர். 25க்கும் மேற்பட்ட பிராண்ட்களின் விளம்பரதாரர் விராட் கோலி. இதன் பிறகு பின்னால் இருக்கிறார் ரோஹித் சர்மா. இவர்களை ஒப்பிடும்போது புஜாராவின் நெட்வொர்த் வெறும் ரூ.24 கோடிதான். ஏனெனில் அவர் பாவம் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடுகிறார்.

ஆகவே இதிலிருந்து இன்றைய தேதியில் இந்திய அணியில் யார் விளையாட வேண்டும், யார் நீக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்திகள் எது என்பது ஓரளவுக்கு நமக்குப் புலப்படுகிறது. கிரிக்கெட் அடிப்படையில் பார்த்தால் புஜாராவை தூக்க வேண்டும் என்று எந்த அளவுகோல்கள் கடைப்பிடிக்கப்படுகிறதோ, அதே அளவுகோலை விராட் கோலிக்கு கடைப்பிடித்தால் என்றோ அவர் டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் புஜாரா நீக்கப்பட்டு கோலி தொடர்கிறார். ரோஹித் சர்மா தொடர்கிறார் என்றால் அது அவர்களின் நெட்வொர்த் சம்பந்தப்பட்ட விஷயம், வர்த்தக விளம்பரங்கள் சம்பந்தப்பட்ட விஷயம்.நாம் இன்னமும் இந்திய அணியைக் கட்டமைப்பது கிரிக்கெட் திறன் மட்டுமே என்று நம்பிக்கொண்டிருப்பதில் நியாயமில்லை, ரசிகர்கள் இந்த புதிய எதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எப்படி எம்.எஸ்.தோனி ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது தோனி கையில் இல்லையோ அதே போல்தான் விராட் கோலியை அணியை விட்டு அவரது தொடர் குறைந்த ஸ்கோர்களுக்காகத் தூக்குவது என்பது அணித்தேர்வுக்குழுவின் கையில் இல்லை என்றே தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்