தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இந்தியா - நேபாளம் இன்று மோதல்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் நேபாளத்துடன் இன்று மோதுகிறது.

தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடர் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. கேப்டன் சுனில் சேத்ரி, ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தி இருந்தார். இந்நிலையில் இந்தியா தனது 2-வது ஆட்டத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நேபாளத்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் அரை இறுதி சுற்றை நெருங்க வாய்ப்பு உள்ளது. இரு அணிகளும் இதுவரை 23 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில்
இந்திய அணி 16 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளது. 2 ஆட்டங்களில் தோல்வியை பதிவு செய்தது. 5 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்திருந்தன. கடைசியாக இரு அணிகளும் 2021-ல்
நடைபெற்ற தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப்பில் மோதி இருந்தன.

இதில் இந்திய அணி அணி 3-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி இருந்தது. இதனால் இந்திய அணி நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக், விதிமுறையை மீறி நடந்துகொண்டதால் ரெட் கார்டு வழங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து அவருக்கு ஒரு ஆட்டத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் துணை பயிற்சியாளர் மகேஷ் காவ்லி, இந்திய அணி வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவார்.

நேபாளம் அணி தனது முதல் ஆட்டத்தில் 1-3 என்ற கோல் கணக்கில் குவைத்திடம் தோல்வி கண்ட நிலையில் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கிறது. அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெற வேண்டுமானால் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்குகிறது நேபாளம் அணி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE