லார்ட்ஸ் டெஸ்ட்டில் 150 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்துவோம்: ஜாக் கிராலி சபதம்

By ஆர்.முத்துக்குமார்

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் கடைசி 2 விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் பாட் கமின்சும், நேதன் லயனும் வெற்றி இலக்கை 55 ரன்கள் கூட்டணியுடன் எட்டியதில் இங்கிலாந்து தோல்வி கண்டது, இங்கிலாந்து ஊடகங்களையும் முன்னாள் வீரர்களையும் கடுமையாக கடுப்பேற்றியுள்ளது. அடுத்த டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் நடைபெறும் போது இங்கிலாந்து பழிக்குப் பழி வாங்கியே ஆக வேண்டும் என்றே அங்கு ரசிகர்களின் மனநிலை உள்ளது.

இந்நிலையில் டைம்ஸ் ரேடியோவில் பேசிய இங்கிலாந்தின் தொடக்க வீரர் ஜாக் கிராலி, இந்தப் பிட்ச் இங்கிலாந்துக்கு சாதகமாக இருக்கும் என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “நாங்கள் வெற்றி பெறுவோம். லார்ட்ஸ் பிட்ச் எங்களுக்கு கொஞ்சம் அதிகமாக சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். எனவே லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.

ஆஸ்திரேலியாவுக்கு முதல் டெஸ்ட்டில் நெருக்கடி கொடுத்தோம். அதனால்தான் அந்தத் தோல்வியை மற்ற தோல்விகளை விட சாதகமாகப் பார்க்கிறோம். அந்த டெஸ்ட் போட்டி கிரிக்கெட்டுக்கு பிரமாதமானது. ஸ்கை ஸ்போர்ட்ஸிற்கு வரலாறு காணாத பார்வையாளர்கள் வந்திருந்தனர். ஆகவே அந்த டெஸ்ட் போட்டி ஒரு கிரேட் டெஸ்ட் போட்டி.

எங்களுக்கு ஆட்டத்தின் முடிவுகள் பற்றி கவலை கிடையாது. ஆனால் அதைப்பற்றியும் பேசுவோம். வெற்றி பெறுவது, தோல்வி அடைவது பற்றியல்ல எங்களது பார்வை. பொழுதுபோக்கு தான் எங்கள் நோக்கம். ஆனால் வெற்றி பெறவே ஆடுவது எங்கள் கிரிக்கெட் பிராண்டுக்கு நல்லது. வெற்றி பெற்றால் அதிக ஈர்ப்பு எங்கள் மீது ஏற்படும்.

5 டெஸ்ட்கள் கொண்ட தொடரில் ஒரு போட்டியை இழந்தோம் அவ்வளவுதான். டெஸ்ட்டை இழந்தாலும் நிறைய மரியாதையைச் சம்பாதித்துள்ளோம். நிறைய எங்களுக்கு ஆதரவு பெருகி வருகிறது. இது கிரிக்கெட் ஆட்டத்திற்கு நல்லது. பாட் கமின்சை முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தது அவர்களுக்கான மெசேஜ். மிடில் ஆஃப் த பேட்டில் பட்டு சென்றது என் அதிர்ஷ்டம்.

நாம் நமக்காக ஆடும்போது பிரஷர் ஏற்படுவதில்லை. சக வீரர்களுக்காக ஆடும்போது நிச்சயம் பிரஷர் ஏற்படும். என் பிரஷர் என்னவெனில் அணிக்காக விரைவு கதியில் ஒரு ஸ்டார்ட் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே. என் பிரஷர் மீடியா என் மீது போடும் பிரஷர் அல்ல, என் அணிக்காக நான் நல்ல தொடக்கத்தை, விரைவு தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே என் பிரஷர்.

இந்தத் தொடரில் வாக்குவாதங்கள் ஏற்படவே செய்யும் எட்ஜ்பாஸ்டனில் அவர்கள் பேசியது ரசிகர்களின் கத்தலினால் காதில் விழவில்லை. ஆனால் லார்ட்ஸ் ரசிகர்கள் கொஞ்சம் அமைதியானவர்கள் என்பதால் ஆஸ்திரேலியர்களின் வாய் வார்த்தைகள் நிச்சயம் கேட்கும். அது சுவாரஸியம்தான், அது நமக்கு மேலும் ஊக்கமளிக்கவே செய்யும்” என்றார் ஜாக் கிராலி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE