இளம் வீரர் ஜெய்ஸ்வாலுக்கு முதல் வாய்ப்பு: மே.இ.தீவுகள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

By செய்திப்பிரிவு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 13 வரையில் மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதல் முறையாக அவர் இந்திய சீனியர் அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். அண்மையில் முடிந்த ஐபிஎல் சீசன் மற்றும் உள்நாட்டில் நடைபெற்று வரும் டொமாஸ்டிக் கிரிக்கெட்டில் தனது சிறப்பான பேட்டிங் திறனை அவர் வெளிப்படுத்தி இந்த வாய்ப்பை பெற்றுள்ளார். அதே போல ருதுராஜ் கெய்க்வாட் டெஸ்ட் அணியில் முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளார். அனுபவ வீரர் புஜாராவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெய்தேவ் உனத்கட், நவ்தீப் சைனி.

ஒருநாள் தொடருக்கான அணியில் சஞ்சு சாம்சன் இடம் பிடித்துள்ளார். ருதுராஜ் மற்றும் முகேஷ் குமார் என இருவரும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் ஒருநாள் அணியை பார்க்கும் போது இதுதான் நடப்பு ஆண்டின் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடரில் விளையாட உள்ள இந்திய அணியா என்பது சந்தேகமாக உள்ளது. டி20 தொடருக்கான அணி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

ஒருநாள் அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷர்துல் தாக்கூர், ஜடேஜா, அக்சர் படேல், சஹல், குல்தீப் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், முகமது சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE