கால்பந்து | உலக சாம்பியன் அர்ஜெண்டினாவுடன் விளையாடும் வாய்ப்பை இந்தியா நழுவவிட்டது எப்படி?

By செய்திப்பிரிவு

மும்பை: கால்பந்தாட்ட உலகின் சாம்பியனான அர்ஜெண்டினா அணியுடன் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது இந்திய கால்பந்தாட்ட அணி. இருந்தும் அந்த வாய்ப்பு நழுவிப் போயுள்ளது. அதனால் இந்தியாவில் மெஸ்ஸி மற்றும் அணியினர் களம் காணவில்லை. அதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.

கடந்த ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா. அந்த தொடரில் அர்ஜெண்டினாவுக்கு தெற்காசிய நாடுகளை சேர்ந்த மக்கள் அமோக ஆதரவு கொடுத்திருந்தனர். குறிப்பாக இந்திய ரசிகர்களின் ஆதரவு அதிகம் இருந்தது. அதற்கு மதிப்பளிக்கும் வகையில் தெற்காசிய நாடுகளில் அர்ஜெண்டினா அணி கடந்த 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாட விரும்பியது.

அந்த வகையில் அர்ஜெண்டினா கால்பந்தாட்ட அணி சார்பாக அந்த அணியின் சர்வதேச உறவுகளின் தலைவர் பாப்லோ ஜோக்வின் டயஸ், நட்பு ரீதியிலான போட்டி தொடர்பாக இந்திய கால்பந்தாட்ட கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதனை இந்திய கால்பந்தாட்ட கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஷாஜி பிரபாகரன் உறுதி செய்துள்ளார்.

“அர்ஜெண்டினா அணியினர் நட்பு ரீதியிலான போட்டிக்காக எங்களுடன் பேசி இருந்தனர். ஆனால், இந்த போட்டிக்காக எங்களால் அவ்வளவு பெரிய தொகையை ஏற்பாடு செய்வது என்பது இயலாத காரியம். இந்த மாதிரியான பெரிய போட்டி இந்தியாவில் நடத்த வலுவான பார்ட்னர்ஷிப் அவசியம். அதோடு இதில் பங்கேற்க அர்ஜெண்டினா அணிக்கு பெரிய தொகையை வழங்க வேண்டி இருந்தது. நமது நாட்டின் கால்பந்தாட்ட பொருளாதார சூழலில் அது சாத்தியமில்லை” என ஷாஜி பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

அர்ஜெண்டினா உலகக் கோப்பையை வென்ற பிறகு உலக அளவில் அதிக டிமாண்ட் உள்ள அணியாக திகழ்ந்து வருகிறது. அந்த அணி போட்டியில் பங்கேற்க சுமார் 32 முதல் 40 கோடி ரூபாய் வரை கட்டணமாக வழங்க வேண்டி உள்ளது. அதனால் தான் இந்தியா இந்த வாய்ப்பை இழந்துள்ளது. அர்ஜெண்டினா அணி, முதலில் இந்தியா மற்றும் வங்கதேசத்தில் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாட விரும்பியுள்ளது. ஆனால், இந்தியா மற்றும் வங்கதேசம் என இரண்டு தரப்பிலும் குறுகிய காலத்தில் அந்த கட்டணத்தை தயார் செய்ய முடியாமல் போன காரணத்தால் சீனாவின் பெய்ஜிங்கில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடந்த 15-ம் தேதியும், ஜகர்த்தாவில் இந்தோனேஷிய அணிக்கு எதிராக கடந்த 19-ம் தேதியும் அர்ஜெண்டினா விளையாடியது குறிப்பிடத்தக்கது.

உலக கால்பந்து அணிகளுக்கான தரவரிசையில் அர்ஜெண்டினா முதல் இடத்தில் உள்ளது. இந்திய அணி 101-வது இடத்தில் உள்ளது. தற்போது இந்திய அணி தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE