சச்சின் பரிந்துரை மட்டுமா... - தோனி கேப்டன் ஆன கதையை பகிர்ந்த திலீப் வெங்சர்க்கார்

By செய்திப்பிரிவு

மும்பை: எம்எஸ் தோனி இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட கதையை முன்னாள் தேர்வுக்குழு தலைவர் திலீப் வெங்சர்க்கார் பகிர்ந்துள்ளார்.

2007 டி20 உலககோப்பைக்கு பின்னர் இந்திய அணியின் (வொயிட் பால்) நிரந்தர கேப்டனாக மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டார். முன்னதாக, தோனி கேப்டனாக நியமிக்கப்படுவதற்கு சச்சின் பரிந்துரையே காரணம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவலாக சில கதைகள் சொல்லப்பட்டுவந்தன.

அதுவரை இந்திய அணியின் கேப்டனாக இருந்த ராகுல் திராவிட் 50 ஓவர் உலகக்கோப்பையில் படுதோல்வி அடைந்த பின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். பிசிசிஐ தலைவராக சரத் பவார் சச்சினை கேப்டனாக பதவி ஏற்க வற்புறுத்த, சச்சின் அதனை மறுத்து தோனி பெயரை பரிந்துரைத்தார் இதுவரை நமக்கு சொல்லப்பட்ட கதை.

இதனிடையே, தோனி இந்திய அணியின் நிரந்தர கேப்டன் ஆன கதையை அக்காலகட்டத்தில் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்த திலீப் வெங்சர்க்கார் தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "சச்சினின் பரிந்துரை, 2007 டி20 உலககோப்பை வெற்றியைத் தாண்டி தோனி கேப்டனாக தேர்வு செய்யப்பட அவரிடம் இருந்த தலைமை பண்பே காரணம். கிரிக்கெட் குறித்த புரிதல், அறிவு மற்றும் உடல் மொழி, அணியை முன்னணியில் இருந்து வழிநடத்தும் திறன் ஆகியவை தோனியிடம் இருந்து எங்களை கவர்ந்தன. தோனி ஆட்டத்தை அணுகும் விதத்தையும், மற்ற வீரர்களுடன் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை நாங்கள் கவனித்தோம். இதில் எங்களுக்கு பாசிட்டிவ் ரிசல்ட் கிடைத்தன. இதுவும், தோனி கேப்டனாக நியமிக்கப்பட முக்கிய காரணிகளாக அமைந்தன" என்று திலீப் வெங்சர்க்கார் பேசியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE