இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்? - ஒரு விரைவுப் பார்வை

By செய்திப்பிரிவு

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் முதல் 2023-25 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் மூன்றாவது எடிஷனில் விளையாட உள்ளது. இந்தச் சூழலில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வியும் இத்துடன் சேர்ந்தே எழுகிறது. ஏனெனில், அடுத்த சில ஆண்டுகளில் நிச்சயம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் பெரிய மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டன்? - கடந்த 2021 வரையில் இந்திய டெஸ்ட் அணியை திறம்பட வழி நடத்தி வந்தார் விராட் கோலி. அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதை அடுத்து ரோகித் சர்மா, கேப்டன் பொறுப்பை ஏற்றார். அவர் தலைமையிலான அணி அண்மையில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவி இருந்தது.

மறுபக்கம் கேப்டன் ரோகித் சர்மா, இன்னும் எத்தனை ஆண்டுகள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவார் என்பதும் சரிவர தெரியவில்லை. தற்போது அவருக்கு 36 வயதாகிறது. அவர் முக்கிய தொடர்களில் மட்டுமே விளையாடுகிறார். அதனால் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் யார் என்பதை அடையாளம் காண வேண்டியது அவசியமாகி உள்ளது.

டி20 கிரிக்கெட்டில் அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்தி வருகிறார். ரோகித்துக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டிலும் ஹர்திக் கேப்டனாக தொடர வாய்ப்புகள் அதிகம். அதற்கு அவரது உடல் ஒத்துழைக்க வேண்டும். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது இப்போதைக்கு தெளிவாக இல்லை.

கடந்த ஆண்டு கார் விபத்தில் சிக்குவதற்கு முன்னர் வரை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், டெஸ்ட் அணிக்கான அடுத்த கேப்டன் ரேஸில் இருந்தார். இளம் வீரர் சுப்மன் கில் சிறப்பாக பேட் செய்து வருகிறார். இருந்தாலும் வெளிநாட்டு தொடர்களில் அவரது செயல்பாடு எப்படி என்பதை பொறுத்தே கேப்டன் வாய்ப்பு அமையும். பவுலரான பும்ராவும் அணியை ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் வழிநடத்தி உள்ளார். ஆனாலும் அவரது காயம் காரணமாக மூன்று ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் உள்ள பணிச்சுமையை அவர் எப்படி சமாளிப்பார் என்பதை பொறுத்தே அதுவும் இருக்கும். கே.எல்.ராகுல் காயத்திலிருந்து மீண்டு வருகிறார்.

இந்தியா என்ன செய்ய வேண்டும்? - இந்திய அணி நிர்வாகம் வளர்ந்து வரும் இளம் வீரரை அணியின் துணை கேப்டனாக நியமிக்க வேண்டும். ரோகித், தனது கிரிக்கெட் கேரியரின் கடைசி கட்டத்தை அணிக்கு பலன் கொடுக்கும் வகையில் திட்டமிடுவது அவசியம். அப்போது தான் அடுத்த கேப்டனை அவரால் வளர்த்துவிட முடியும். ஒரு கேப்டன் செய்ய வேண்டியதும் அதுதான். அது குறித்து இந்திய அணி நிர்வாகம் நிச்சயம் இப்போதே ஆலோசிக்க வேண்டும். அதற்கான நகர்வுகளை எதிர்வரும் மேற்கிந்திய தீவுகள் பயணத்திலேயே தொடங்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE